சிங்கப்பூரில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா: ஒமிக்ரான் பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பிவைப்பு

கோவை: சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒமிக்ரான் தொற்று பரிசோதனைக்காக அவரின் சளி மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த 42 வயது ஆண் கடந்த 2ம் தேதி சிங்கப்பூரில் இருந்து சென்னை வழியாக கோவை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பில்லை என தெரியவந்தது.

இருப்பினும், சிங்கப்பூரில் இருந்து வந்ததால் சுகாதாரத்துறையினர் அவரை வீட்டில் ஒரு வாரம் தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.  ஒரு வாரத்திற்கு பின் அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனைத்தொடர்ந்து ஒமிக்ரான் நோய் தொற்று கண்டறிவதற்காக அவரின் சளி மாதிரிகள் சென்னையிலுள்ள மாநில சுகாதாரத்துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: