கணவர் சாவில் சந்தேகம் என எஸ்பியிடம் முறையீடு: எரிக்க இருந்த நேரத்தில் மயானத்தில் சடலம் மீட்பு: வெளிநாட்டிலிருந்து மனைவி கூறிய புகாரால் போலீசார் நடவடிக்கை'

கெங்கவல்லி,: சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த நடுவலூர் மேற்குகாட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(46). இவர் தம்மம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சத்தியவாணி என்ற மனைவியும், 16 வயதில் மகனும் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக, மகனை தனது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, சத்தியவாணி மலேசியாவில் வீட்டு வேலை செய்து வருகிறார். இதனால், சதீஷ்குமார் அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், சதீஷ்குமார் உடல்நிலை சரியில்லாததால் இறந்துவிட்டதாக, சத்தியவாணிக்கு நேற்று காலை உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும், சதீஷ்குமாரின் உடலை தகனம் செய்வதற்காக, அவரது தம்பி சுரேஷ்குமார் ஏற்பாடுகள் செய்வதாகவும் தெரிவித்தனர்.

கணவனின் இறுதி காரியத்தில் கலந்துகொள்ள மலேசியாவில் இருந்து புறப்பட்ட சத்தியவாணி, இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, சேலம் மாவட்ட எஸ்பி அபிநவ்வை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சத்தியவாணி, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் புகார் அளித்தார். இதனையடுத்து, உடனடியாக சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கும்படி, கெங்கவல்லி போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.

அதன் பேரில், கெங்கவல்லி போலீசார்உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். இதனிடையே சதீஷ்குமார் உடலை உறவினர்கள் தகனம் செய்ய மயானத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இதையடுத்து, மயானத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கடைசி நேரத்தில் உறவினர்களின் எதிர்ப்பை மீறி சதீஷ்குமார் உடலை கைப்பற்றினர்.

Related Stories: