மார்க்சிஸ்ட் எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் காலமானார்

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி என்.சங்கரய்யாவின் சகோதரரும், எழுத்தாளருமான என்.ராமகிருஷ்ணன் (80) மதுரையில் நேற்று முன்தினம் இரவு திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். நேற்று இவரது இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  மறைந்த என்.ராமகிருஷ்ணன் பத்திரிகையாளர், எழுத்தாளர். கட்சியின் பிரபலங்களான ஜானகியம்மாள், சுந்தரைய்யா, ராமமூர்த்தி, ரணதிவே, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஹரிகிஷன் சிங் சுர்ஜித், ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு, ஹரி கிருஷ்ணா, பசவப்புன்னையா ஆகியோர் வாழ்க்கை வரலாற்றை நூலாக்கி வெளியிட்டுள்ளார். கட்சி எம்பிக்களின் நாடாளுமன்ற பேச்சை, மொழிபெயர்த்து  வழங்குவார்.

காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், தந்தை பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள்,  மார்க்சியம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். மதுரையில் இவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திண்டுக்கல் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர்கள் கணேசன், ராஜேந்திரன், சச்சிதானந்தம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நேற்றுமாலை நடந்த இறுதி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: