உத்தரகாண்ட் பாஜ எம்எல்ஏ ஹர்பன்ஸ் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

டேராடூன்: உத்தரகாண்ட்டில் பாஜ எம்எல்ஏவும் மூத்த தலைவருமான ஹர்பன்ஸ் கபூர் மரணமடைந்தார்.  உத்தரகாண்ட் டேராடூன் கன்டோன்ட்மென்ட் பாஜ எம்எல்ஏ ஹர்பன்ஸ் கபூர்(75). இவர் உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை சபாநாயகராக இருந்தவர். உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் அமைச்சர் பொறுப்பு வகித்தவர். எட்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். பாஜவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இவர், கடந்த 9ம் தேதி தொடங்கிய உத்தரகாண்ட் சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடரில் பங்கேற்றார். இந்நிலையில் டேராடூனில் உள்ள தனது இல்லத்தில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘உத்தரகாண்டை சேர்ந்த எங்களது கட்சியின் மூத்த தலைவர் ஹர்பன்ஸ்  கபூர் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. பொதுமக்கள் சேவை மற்றும் சமூக சேவைக்கான அவரது பங்களிப்பால் எப்போதும் நினைவுகூரப்படுவார்கள். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: