ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்கான உத்வேகத்தை கொடுத்தவர் கோஹ்லி...: புதிய கேப்டன் ரோகித் பாராட்டு

மும்பை: ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தை இந்திய அணி வீரர்களுக்கு கொடுத்தவர் விராத் கோஹ்லி என்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டன் ரோகித் ஷர்மா மனம் திறந்து பாராட்டி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அடுத்து தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகும் வகையில், இந்திய அணி வீரர்கள் மும்பையில் முகாமிட்டு தீவிரமாகப் பயிற்சி செய்து வருகின்றனர். உலக கோப்பை தொடருடன் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோஹ்லி விலகிய நிலையில், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் கூறியதாவது: கோஹ்லி 5 ஆண்டுகளாக இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தினார். களத்தில் முன்னின்று செயல்பட்டதுடன், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தை அவர் வீரர்களுக்கு கொடுத்தார். அவரது தலைமையின் கீழ் நான் ஏராளமான போட்டிகளில் விளையாடி உள்ளேன். அந்த தருணங்களை மிகவும் ரசித்து அனுபவித்தேன். இனியும் அது தொடரும். 2013ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ஐசிசி தொடர்களில் கோப்பையை வெல்ல முடியாததில் சற்று ஏமாற்றம் தான். ஆனால், இந்திய அணி தவறாக எதையும் செய்யவில்லை என்றே நினைக்கிறேன். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கணிசமான வெற்றிகளைக் குவித்து வந்துள்ளோம். பெரிய தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல கூடுதலாக சிறிது முயற்சி தேவைப்படும். துரதிர்ஷ்டவசமாக அது எங்களுக்கு கை கூடவில்லை.

சர்வதேச கிரிக்கெட்டில் இது சகஜம் தான். இப்போது எல்லா அணிகளுமே மிகச் சிறப்பாக செயல்படுவதால் போட்டி மிகக் கடுமையாகி இருக்கிறது. அதே சமயம் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாக இனி வரும் போட்டிகளில் இந்த சவாலை திறம்பட எதிர்கொள்வோம். அடுத்து பல உலக கோப்பை தொடர்கள் வரிசையாக வரவுள்ளன. அவற்றில் கோப்பையை கைப்பற்ற முயற்சிப்போம். அதற்கு முன்பாக தனிப்பட்ட வீரராகவும், ஒருங்கிணைந்து அணியாகவும் சிறப்பாக செயல்பட எங்களை தயார் செய்துகொள்ள வேண்டியது அவசியம். தொடக்கத்தில் சில விக்கெட் சரிந்தால் அதில் இருந்து மீள்வதற்கு சற்று தடுமாறுவது வழக்கமாக உள்ளது. அந்த குறையை நிவர்த்தி செய்ய கூடுதல் கவனம் செலுத்துவோம்.

அணியில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவர்களுக்கு உணர்த்துவதில் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு கடமையும் பொறுப்பும் உள்ளது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் இணைந்து செயல்படுவதை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவர் விளையாடியபோதும்... தற்போது பயிற்சியாளராக இருக்கும்போதும் எந்த அளவுக்கு கடினமான ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதே சமயம் வீரர்கள் இயல்பாகவும், தங்களுக்குள் சகஜமாகப் பழகுவதும் முக்கியம். டெஸ்ட் போட்டிகளில் எனது சிறப்பான ஆட்டம் இனி தான் வரப்போகிறது என்று நினைக்கிறேன். இவ்வாறு ரோகித் கூறியுள்ளார். இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் டிச. 26ம் தேதி தொடங்குகிறது.

Related Stories: