×

பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு: ஒமிக்ரானுக்கு இங்கிலாந்தில் முதல் பலி: அடுத்த 4 மாதத்தில் 75,000 இறப்புகள் ஏற்படலாம் என ஆய்வில் எச்சரிக்கை

லண்டன்: புதிய வகை கொரோனா வைரசான ஒமிக்ரானுக்கு, உலகிலேயே முதல் முறையாக லண்டன் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரசால் இன்னும் 4 மாதத்தில் 75,000 பேர் பலியாகக் கூடும் என ஆய்வு முடிவுகளும் எச்சரித்துள்ளன. தென்ஆப்ரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை புதிய வைரஸ், முந்தைய டெல்டா வைரசைக் காட்டிலும் வீரியமிக்கது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை மீறி வேகமாக பரவக் கூடிய இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட 70 நாடுகளில் பரவி விட்டது.

இந்தியாவில் நேற்று மகாராஷ்டிராவில் புதியதாக 2 பேர் பாதிக்கப்பட்டு எண் ணிக்கை 40 பே்ராக அதிகரித்துள்ளது. ஆனாலும் இந்த வைரஸ் தொற்று நோயாளிகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, ஒமிக்ரானால் ஒருவர் கூட இறக்கவில்லை என்பது ஆறுதலான விஷயமாக இருந்து வந்தது. இந்நிலையில், உலகில் முதல் முறையாக ஒமிக்ரானால் ஒருவர் பலியாகி இருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே ஒமிக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் இங்கிலாந்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி செய்துள்ளார்.

கிழக்கு லண்டனின் பட்டிங்டன் அருகே கிளினிக்கில் ஒமிக்ரான் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த அந்த நோயாளி நேற்று இறந்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ‘‘ஒமிக்ரான் வைரஸ் பரவல் வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் இந்த வைரசால் மிகப்பெரிய அலை உருவாகவும் வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் தங்களை காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்’’ என்றார். இங்கிலாந்தில் தற்போது 3,000க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 3 நாட்களிலும் ஒமிக்ரான் வைரசின் தினசரி தொற்று இரட்டிப்பாகி வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் கூறி உள்ளார். அதே சமயம் ஒமிக்ரானால் 10 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஒமிக்ரான் வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை தாண்டி தாக்கக் கூடியதா, இறப்புகளை அதிகரிக்குமா என்பது குறித்து சமீபத்திய புள்ளிவிவரங்களைக் கொண்டு இங்கிலாந்தின் லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிக்கல் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மதிப்பாய்வு செய்யப்படாத இந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:
* 2021ம் ஆண்டு ஜனவரியில் காணப்பட்டதை விட அதிக அளவிலான பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
* தோராயமாக தினசரி 2,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு.
* டிசம்பர் 1ம் தேதியிலிருந்து 2022 ஏப்ரல் 30ம் தேதிக்குள் 1 லட்சத்து 75 பேர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு 24,700 பேர் இறப்பதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன.
* எனவே 2022ம் ஆண்டு தொடக்கத்திலேயே பொழுதுபோக்கு இடங்களை மூடுவது, ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது போன்ற கட்டுப்பாடுகள் அவசியம்.
* வரும் நாட்களில் கூடுதல் கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், மோசமான சூழலில் ஏப்ரல் 30ம் தேதிக்குள் 4.92 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 74,800 பேர் இறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
* எனவே, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும். பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம், சமூக இடைவெளி பின்பற்றுவது போன்றவற்றை கடுமையாக்க வேண்டும். ஒமிக்ரானின் குணாதிசயங்கள் நிறைய நிச்சயமற்ற தன்மையை கொண்டுள்ளன. எனவே, தற்போதைய கணிப்புகள் ஆரம்பகட்ட தகவலின் அடிப்படையிலானவை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Boris Johnson ,Omigran ,UK , Prime Minister Boris Johnson, announcement, omigron, warning
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது