காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வழக்கமான நடைமுறைகள் தொடரக்கோரி வழக்கு: அறநிலையத்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பாராயணம், திருமஞ்சனம், பிரசாதம் உள்ளிட்ட நடைமுறைகளை தொடர உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அறநிலையத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்கள் மூடப்பட்ட நிலையில், அனைத்து கோயில்களும் திறக்கப்படலாம் என்று கடந்த அக்டோபர் 14ம் தேதி தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இந்த அறிவிப்பிற்கு முரணாக வரதராஜ பெருமாள் கோயிலில் மட்டும் வழக்கமான நடைமுறைகள் அனுமதிக்கப்படவில்லை என சென்னையை சேர்ந்த ஆனந்த தேசிகன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், வரதராஜ பெருமாள் கோயிலில் துளசி தீர்த்தம், திருமஞ்சனம், அர்ச்சனை, பிரசாதம், வேத பாராயணம், சடாரி போன்ற வழக்கமான நடைமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்ட கோயில்களில் இந்த வழிபாடுகளுக்கு அனுமதி அளித்து தனியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாதம் தொடங்க உள்ளதால் கோயிலின் வழக்கமான நடைமுறைகளை தொடரும்படி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு, இந்து சமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம் ஆகியவை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.   

Related Stories: