×

குமரியில் இன்று கடல் சீற்றம் படகு சேவை திடீர் நிறுத்தம்: ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக இன்று காலை படகு சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை சீசன் களை கட்டி உள்ளது. விரதம் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி விரதத்தை முடிப்பது வழக்கமான ஒன்று. சபரிமலையில் விதிக்கப்பட்டு இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.  இதனால் தினசரி ஏராளமான பக்தர்கள் அங்கு செல்கின்றனர்.

இதனால் கன்னியாகுமரிக்கு வந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வரத் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவே அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு மூலம் சென்று பார்வையிடுவது வழக்கம்.

இவர்களின் வசதிக்காக தினமும் காலை 8.30 மணிக்கு படகு சேவை தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. அதன்படி வழக்கம்போல் இன்று காலை 8.30 மணிக்கு படகு சேவை தொடங்கியது. தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஆகியோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் கடலில் சூறை காற்று வீசியது. இதனால் கடல் அலை பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து காலை 9.30 மணியளவில் படகு சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடல் சீற்றம் குறைந்த பின்னர் மீண்டும் படகு சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்காக ஆர்வத்துடன் வந்த ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags : Kumary , Sea rage boat service halted in Kumari today: Ayyappa devotees, tourists disappointed
× RELATED வருமானத்திற்கு அதிகமாக சொத்து...