×

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி 5ல் சட்டப்பேரவை கூட்டம்; முதல் நாளில் கவர்னர் உரையாற்றுகிறார்; சபாநாயகர் அப்பாவு பேட்டி..!

சென்னை: சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் ஜனவரி 5ம் தேதி தொடங்கும். முதல்நாளில் கவர்னர் உரைநிகழ்த்துவார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.  ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தின், முதல் கூட்டத் தொடரில் கவர்னர் உரையாற்றுவது மரபு. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டம் வருகிற ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு தலைமைச் செயலக வளாகத்தில் இன்று அளித்த பேட்டி:  ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். தலைமைச்செயலக வளாகத்தில் ஏற்கனவே சட்டமன்ற பேரவை நடைபெறும் இடத்தில் பேரவைக் கூட்டம் நடைபெறும். ஆளுநர் உரையுடன் ெதாடங்குவதுதான் மரபு. அதற்கு அடுத்து பொது பட்ஜெட். பிறகு மானியக்கோரிக்கை. அரசு, சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை கடுமையான முயற்சி செய்து மிகப்பெரிய அளவில் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக 83% நபர்களுக்கு முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விட்டது.

50% மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. ஆகவே தான் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது. 100 சதவீதம் தொடுதிரை வசதி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் முன்பும் இருக்கும். காகிதம் இல்லாத பட்ஜெட்டாகத்தான் ஆரம்பித்தோம். அதேபோல அனைத்து பணிகளும் காகிதம் இல்லாத அளவுக்கு தான் நடைபெறும். தொடுதிரை உதவியுடன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பயன்படுத்துகின்ற வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பதை அலுவல்குழு கூடி தேவையா?, தேவையில்லையா? என்பதை முடிவு செய்வோம். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தமிழகத்தின் நிதிக்குழுக்களை கண்காணிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளதாக தெரியவில்லை. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து தான் செயல்படும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வரிகள் ஒன்றிய அரசுக்கு செல்கிறது. அனைத்து திட்டங்களும் மாநில அரசு மூலமாக தான் நடைபெறும். கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழக முதல்வர் இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வர் என்று நீங்கள் தான் சொல்லி இருக்கிறீர்கள். அதனால் இங்கு எப்படி நடக்கிறது என்பதை பார்வையிட்டு மற்ற மாநிலங்களுக்கும் கொண்டு செல்லாம். பாராளுமன்றத்திற்கும் கொண்டு செல்லலாம் என்பதற்காக அதிகாரிகள் வந்து இருக்கலாம். சபாநாயகர்களுக்கான மாநாடு சிம்லாவில் நடைபெற்றது. அப்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சபாநாயகர்களும் வந்து இருந்தனர். அதனால் கருத்தை சொல்ல முடிந்ததே தவிர, அதை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய இடத்தில் இருக்கக்கூடிய கவர்னரிடமோ, ஜனாதிபதியிடமோ இதை செய்யுங்கள் என்று கூறுவது சபாநாயகரின் வேலை இல்லை. அந்த பணி சபாநாயகருக்கு கிடையாது. ஒட்டுமொத்தமாக இந்தியா அளவில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில், சபாநாயகர்கள் நிறைவேற்றிக்கொடுக்கும் தீர்மானங்கள் காலதாமதம் இல்லாமல் சட்டம் ஆக வேண்டும் என்ற கருத்துதான் அதன் வெளிப்பாடு.  இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.



Tags : St George's Castle , Legislature meeting on January 5 at Fort St. George; The Governor addresses the first day; Interview with Speaker Dad ..!
× RELATED செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி 5ல்...