ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம்.! பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ரூ.100 சிறப்பு தரிசனம் டிக்கெட் எடுத்தவர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று ஞாயிறு விடுமுறையையொட்டி புதுமணத் தம்பதிகள், ஐயப்ப பக்தர்கள், வெளிமாவட்ட பக்தர்கள் என கோயில் வளாகம், கடற்கரை, வள்ளிகுகை என திரும்பும் திசையெங்கும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நூற்றுக்கணக்கான கார், வேன்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாழிக்கிணறு, கோயில் வளாக பகுதி வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒரேநேரத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் அவை புறப்பட்டு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. மேலும் ரதவீதிகள், முக்கிய சாலைகளிலும் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் டூவிலர்களில் சென்றவர்களும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ரூ.100 டிக்கெட் எடுத்தவர்கள் 5 மணி நேரத்திற்கு மேல் நீண்டவரிசையில் காத்திருந்தனர். கோயில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காணப்பட்டனர்.

கோயிலுக்கு வந்த பக்தர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துவதால், கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு விபத்து ஏற்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கும் போவதற்கும் சிரமம் ஏற்படுகிறது. கடற்கரை பகுதிகளில் குப்பைகள் அதிகமாக கிடப்பதால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. கோயிலில் குடிநீர் வசதி சரிவர செய்யாததால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், குழந்தைகள் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இதேபோல் பெண்கள் குளிக்கும் இடத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. உடை மாற்ற போதிய இடவசதி இல்லாததாலும், போதிய கழிப்பறை வசதிகளும் இல்லாததாலும் பெண்கள், முதியவர்கள் சிரமத்திற்குள்ளாகினர். எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க திருக்கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: