×

நீலகிரியில் வனப்பகுதியில் சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கும் பொதுமக்கள் - வனத்துறையினர் துப்பாக்கியுடன் ரோந்து பணி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள தேவாலா பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் கைவிடப்பட்ட தங்க சுரங்கங்களில் சிலர் சட்ட விரோதமாக தங்கம் எடுப்பது குறித்து தகவல் வெளியானது. இதனையடுத்து அங்கு வனத்துறையினர் துப்பாக்கி ஏந்தி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வனப்பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் சுரங்கங்கள் தோண்டப்பட்டு தங்கம் எடுக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் உள்ளூரை சேர்ந்த மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகவே அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தங்க சுரங்கங்களை தோண்டி அதிலிருந்து தங்கம் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளில் உள்ளூர் மக்கள் 1000திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வரக்கூடிய சூழ்நிலையில் மக்களுடைய வாழ்வாதாரம் கருதி அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் அந்த தங்க குழிக்குள் யானைக்குட்டி ஒன்று விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் வனத்துறையினர் அதனை மீது தாயுடன் சேர்த்தனர். அந்த சமயத்தில் அங்கு ஏற்கனவே தோண்டப்பட்ட குழிக்குள் இறந்து 6 மாதங்களாக ஒரு ஆண் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் இதற்கு வன ஆர்வலர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மக்கள் எப்படி அத்துமீறி நுழைந்து தங்கம் எடுக்கிறார்கள் என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் வனத்துறையும் அந்த பகுதிகளில் அறிவிப்பு பலகைகளை வைத்தும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியும் தங்கம் எடுக்கும் பணிகளை தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் ஒருசிலர் அத்துமீறி நுழைந்து அந்த பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இன்று வனத்துறையினர் துப்பாக்கியுடன் அந்த பகுதியில் ரோந்து பணியை மேற்கொள்கின்றனர். மர்ம நபர்கள் யாரேனும் அந்தண் பகுதியில் தங்கம் எடுக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனரா? என்ற கோணத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Nilagiri , Wilderness, Gold, Public
× RELATED நீலகிரியில் கனமழையால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து