எதிர்ப்புக்கு பணிந்தது சி.பி.எஸ்.இ.!: 10ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி நீக்கம்..!!

டெல்லி: சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி நீக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய கேள்விக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து சி.பி.எஸ்.இ. பணிந்துள்ளது. சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வில் பிற்போக்குத்தனமான கேள்வி கேட்கப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. இதுகுறித்து மக்களவையில் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், பல்வேறு சமூக, குடும்பப் பிரச்சனைக்கு பெண்கள் சுதந்திரம் பெறுவது தான் காரணம் என்று கேள்வியில் கூறப்பட்டுள்ளது. கேள்வியில் இடம்பெற்றிருந்த மொத்த பத்தியில் கடும் கண்டனத்திற்குரிய கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.

கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த பத்தி தொடர்பாக கேட்கப்பட்டிருந்த கேள்விகளும் அறிவீனமானவை. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் சேர்ந்து தாமும் கடும் ஆட்சேப்பதை பதிவு செய்வதாக கூறினார். சி.பி.எஸ்.இ. கல்வியும் தேர்வும் தரக்குறைவாக இருப்பதை அது நடத்தும் முக்கியமான தேர்வு காட்டுவதாகவும் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்தார். எனவே சர்ச்சைக்குரிய கேள்வித்தாள் தயாரித்த சி.பி.எஸ்.இ. மன்னிப்பு கேட்க வேண்டும். கேள்வித்தாளை திரும்பப்பெற்று விசாரணைக்கு சி.பி.எஸ்.இ. உத்தரவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி நீக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. ஆங்கில பாடத்திட்டம் தொடர்பான நிபுணர்களின் பரிந்துரையை ஏற்று கேள்வி நீக்கப்படுவதாகவும், சர்ச்சைக்குரிய கேள்விக்கான முழு மதிப்பெண் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்திருக்கிறது.

Related Stories: