×

துயரத்தில் உள்ள ஆஃப்கன் மக்‍களுக்‍கு இந்தியாவின் உதவி என்றென்றும் நினைவுகூரப்படும்: தாலிபான்கள் நன்றி

காபூல்: 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளுடன் அவசர மருத்துவ உதவி பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்த இந்தியாவுக்கு அந்நாட்டு அரசு நன்றி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா தனது மொத்த படைகளையும் ஆப்கனில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அமெரிக்கா மெல்லத் தனது படைகளை திரும்ப பெற தொடங்கியதும், சற்றும் தாமதிக்காத தாலிபான்கள் மீண்டும் ஆப்கனை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தொடங்கியது. முதலில் எல்லைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தாலிபான்கள், பிறகு கிராமப்புறங்களையும் அடுத்து நகர்ப்புறங்களையும் அடுத்தடுத்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

தற்போது ஆப்கானிஸ்தானுக்கு கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் போன்ற நாடுகள் மட்டுமே உதவிகளை அளித்து வந்தன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகள் உட்பட 1.6 மெட்ரிக் டன் எடை கொண்ட அவசரகால பயன்பாட்டுக்கான மருத்துவ உதவி பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலமும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை மூலம் பயன்படுத்தப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.

இந்த பொருட்கள் அடங்கிய பெட்டிகளில் ஆப்கான் மக்களுக்கு இந்தியர்களின் உதவி என எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்பொருட்கள் ஆப்கானிஸ்தானை அடைந்ததை உறுதி செய்த தாலிபான்களின் அரசு பெரும் துயரத்தில் இருக்கும் போது இந்தியா அளித்துள்ள மனிதாபிமான உதவி என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும் என அறிவித்துள்ளது. வரும் நாட்களில் 50,000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பவும் இந்தியா தீர்மானித்துள்ளது.


Tags : India ,Afghans ,Taliban , Tragedy, Afghans, Taliban
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!