×

உணவு, புகை மற்றும் மது பழக்கம் காரணமாக மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 ஆண்டில் அதிகரிப்பு: ஒரு லட்சம் பேரில் 350 ஆண், 250 பெண்கள் பாதிப்பு

சேலம்: உணவு, புகை மற்றும் மது பழக்கத்தால் மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், இளைஞர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக அளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவில் மாரடைப்பு தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆரம்ப காலக்கட்டத்தில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு அதிகளவில் ஏற்பட்டு வந்தது. கடந்த 5 வருடங்களாக இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. மாரடைப்பு வராமலும் தடுக்க முடியும். குறிப்பாக, மதுப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் உணவுப்பழக்கம் காரணமாக அனைத்து வயதினரையும் மாரடைப்பு தாக்குகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள், பெண்கள் இருவரும் உணவுப்பழக்கத்தை முறையாக கடைபிடிக்காமல் இருக்கின்றனர். குறிப்பாக, துரித உணவு, கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவது போன்றவையால் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து மாரடைப்பு ஏற்படுகிறது. உடல் பருமனும், கொழுப்பும் மாரடைப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் ஒவ்வொருவரும் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டு மாரடைப்பு பாதிப்பை கட்டுப்படுத்தலாம். அதேபோல், புகை மற்றும் மதுப்பழக்கமும் மாரடைப்புக்கு அதிக வாய்ப்பாகிறது. இதனால் மூன்றையும் வாழ்வில் கட்டுக்கோப்புடன் வைத்திருக்க வேண்டும். இதன் மூலமாகவே மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை இதய மருத்துவர்கள் கூறியதாவது:
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக மாரடைப்பு பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, சமீபத்தில் மருத்துவ குழு அமைத்து தென்னிந்தியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது உணவு, புகை மற்றும் மது பழக்கங்கள் தான் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இதய ரத்தக் குழாயில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு வருபவர்கள் 40 சதவீதமாகவும், 85 சதவீதம் இதய பாதிப்புடன், ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு வருபவர்கள் 60 சதவீதமாகவும் இருந்தது.

தற்போதைய ஆய்வில், இதய ரத்தக் குழாயில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு வருபவர்கள் 60 சதவீதமாகவும், 85 சதவீதம் இதய பாதிப்புடன், ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு வருபவர்கள் 40 சதவீதமாகவும் மாறியுள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகையில் 350 ஆண்கள் மற்றும் 250 பெண்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனிடையே, மாரடைப்பால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 11 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 19 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டு வருகின்றனர். 100 சதவீதம் ரத்தக் குழாயில் அடைப்புடன் வருபவர்களுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொண்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசான பாதிப்புடன் வருபவர்களுக்கு மருந்து மூலமாகவும், இல்லையென்றால் பாதிப்பை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாரடைப்பு அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 30 முதல் 120 நிமிடங்களுக்குள் சென்று முதற்கட்ட சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் மாறிய உணவு பழக்க வழக்கம், மன அழுத்தம், புகை, மதுப்பழக்கம் ஆகியவை காரணமாக 40 வயதுக்கும் குறைவான இளைஞர்களுக்கும் எளிதில் மாரடைப்பு பாதிப்பு வருகிறது. இந்த பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள புகை மற்றும் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். மேலும், சீரான உணவுப்பழக்க வழக்கத்தை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் மட்டுமே மாரடைப்பு பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

Tags : Diet, smoking, alcoholism, heart attack, increase
× RELATED அரசு கலை மற்றும் அறிவியல்...