×

இந்தியா இந்துக்களின் நாடு இந்துவாதிகளுக்கானது அல்ல: ராகுல் காந்தி தாக்கு

ஜெய்ப்பூர்:  இந்தியா இந்துக்களின் நாடு, இந்துவாதிகளுக்கானது அல்ல. நான் இந்து. இந்துத்வாவாதி கிடையாது. இந்துத்வாவாதிகளை விரட்டியடித்து இந்துக்களின் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார். நாட்டில் பணவீக்கம் அதிகரித்துவருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தேசிய அளவிலான பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: ‘இந்தியா இந்துக்களின் நாடு. எந்த நிலையிலும் ஆட்சியில் இருக்க விரும்பும் இந்துத்வாவாதிகளுக்கானது அல்ல. நாட்டில் பணவீக்கம் ஏற்பட்டு துன்பம் இருக்கிறது என்றால் அதை இந்துவாதிகள் செய்திருக்கிறார்கள். பிரதமர் மோடியும் அவரது மூன்று நான்கு நண்பர்களும் சேர்ந்து நாட்டை அழித்துவிட்டனர். இந்து மற்றும் இந்துத்வா இரண்டும் வெவ்வேறானவை. எவருக்கும் அஞ்சாதவர் அனைவரையும் அரவணைப்பவர் தான் இந்து. மகாத்மா காந்தி ஒரு இந்து. கோட்சே இந்துத்வாவாதியாக இருந்தார். இந்து உண்மையை தேடுகிறான்.

இந்துத்வாவாதிகள் வாழ்நாள் முழுவதும் அதிகாரத்திற்காக செலவிடுகிறார்கள். நான் இந்து. இந்துத்வாவாதி கிடையாது. இந்துத்வாவாதிகளை மீண்டும் ஒரு முறை விரட்டியடித்து நாட்டில் இந்துக்களின் ஆட்சியை கொண்டு வர வேண்டும்.’ இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து பொது செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: ‘பிரதமர் மோடி தலைமையிலான அரசு சாதாரண மக்களுக்காக என்ன செய்துள்ளது?  குறிப்பிட்ட சில தொழிலதிபர் நண்பர்களுக்கு அரசு பணியாற்றி வருகின்றது.

இரண்டு வகையான அரசுகள் உள்ளது. முதல் வகையான அரசானது  சேவை, அர்ப்பணிப்பு, உண்மை தன்மை ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டது. இரண்டாவது வகை அரசானது, பொய், பேராசை மற்றும் கொள்ளையை குறியாக கொண்டு செயல்படுவதாகும். தற்போதுள்ள ஒன்றிய அரசின் இலக்கு பொய்கள், பேராசை மற்றும் கொள்ளையாகும். 7 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி கட்டியதை தான் ஒன்றிய அரசு தற்போது தொழிலதிபர் நண்பர்களுக்கு ஒன்றிய அரசு விற்பனை செய்வதற்கு விரும்புகின்றது. இவ்வாறு அவர் பேசினார்.


Tags : India ,Hindus ,Rahul Gandhi , India, the country of Hindus is not for Hindus, Rahul Gandhi
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...