×

பெற்றோருக்குத் தெரியாமல் விசா எடுத்தார் இன்ஸ்டாகிராம் நண்பனுடன் வசிக்க ஸ்வீடனில் இருந்து மும்பை வந்த சிறுமி: போலீசார் பத்திரமாக மீட்டனர்

மும்பை:  ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி, இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். அதன் மூலம் அவருக்கு மும்பையைச் சேர்ந்த 19 வயதுடைய இன்ஜினியரிங் மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சாட்டிங் செய்து வந்துள்ளனர். தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். நட்பு நாளடைவில் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, நண்பனைப் பார்க்கவும், அவனுடன் சேர்ந்து வசிக்கவும் ஆசைப்பட்ட சிறுமி, பெற்றோருக்குத் தெரியாமலேயே டூரிஸ்ட் விசாவில் நவம்பர் மாதம் 27ம் தேதி மும்பை வந்தார்.

அங்கிருந்து நேராக இன்ஸ்டாகிராம் நண்பன் வீட்டுக்குச் சென்றார். இந்தச் சிறுமியை பார்த்த இன்ஜினியரிங் மாணவனின் பெற்றோர், அதிர்ச்சி அடைந்தனர்.  அந்தச் சிறுமியை, டிரோம்பேயில் சீட்டா கேம்ப்பில் தனது உறவுப்பெண் ஒருவருடன் தங்க வைத்தனர். இதற்கிடையே, சிறுமியைக் காணாமல் பதைபதைத்த அவளது பெற்றோர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கடந்த 4ம் தேதி, சிறுமியை காணவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டனர். அதோடு, மகளின் சமூக வலைதள தொடர்புகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான், மகள் இன்ஸ்டாகிராமில் மும்பையைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவனுடன் நட்புக் கொண்டிருந்தது தெரியவந்தது.

மேலும், அதில் சிறுமி பகிர்ந்திருந்த தகவல்களை பார்த்து, இந்தியாவில் மும்பையில் இருப்பதை உறுதி செய்தனர். மேலும், சிறுமி ஒரு மாத டூரிஸ்ட் விசா எடுத்து சென்றிருப்பதையும் கண்டு பிடித்தனர். சிறுமி இருக்கும் இடத்தை அறிந்த சர்வதேச போலீசார், மும்பை போலீசைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் உதவியுடன், மும்பை போலீசார் சர்வதேச போலீஸ் உதவி அலுவலர் உடன் இணைந்து விசாரணை நடத்தினர். தேடுதல் வேட்டையில், அந்த சிறுமியை கண்டுபிடித்த அவர்கள், டோங்க்ரியில் உள்ள சிறுவர் நல இல்லத்தில் ஒப்படைத்தனர்.
 
விசாரணையில் அந்தச் சிறுமி பெற்றோருக்குத் தெரியாமல் விசா எடுத்து வந்ததும், இன்ஸ்டாகிராம் நண்பனுடன் சேர்ந்து வசிக்க ஆசைப்பட்டு கிளம்பி வந்ததும் தெரிந்தது. இதுகுறித்து சுவிஸ் தூதரகம் மற்றும் டெல்லி சர்வதேச போலீஸ் அலுவலகத்துக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சிறுமியின் தந்தை, சிறுமியை மீட்டு, கடந்த வெள்ளிக்கிழமை சுவீடனுக்கு அழைத்துச் சென்றார். இன்ஜினியரிங் மாணவரிடம் தவறு இல்லை என்பதால், அவர் மீது போலீசில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என போலீசார் கூறினர்.

Tags : Mumbai ,Sweden ,Instagram , Parents, Visa, Instagram friend, girl from Mumbai, police
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!