திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி கோவாவை கடவுள் தான் காப்பாத்தணும்: ப.சிதம்பரம் டிவிட்டரில் கருத்து

கோவா: திரிணாமுல் காங்கிரஸ் கோவாவில் ஆட்சி அமைத்தால் வீட்டுக்கு ஒரு பெண்ணுக்கு மாதம் ரூ.5000 வங்கியில் பணப்பரிமாற்றம் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளதற்கு கோவா மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ப.சிதம்பரம் ‘கோவாவை கடவுள் தான் காப்பாத்தணும்’ என்று டிவீட் செய்துள்ளார். கோவா மாநில சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ், ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், பாஜ என அனைத்து கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் கோவாவில் 40 இடங்களிலும் போட்டியிடுகிறது. இந்நிலையில், கோவா மாநில திரிணாமுல் தலைவர் மஹூவா மொய்த்ரா, ‘திரிணாமுல் கோவாவில் ஆட்சி அமைத்தால் கிரஹலட்சுமி என்ற திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வங்கியில் பணப்பரிமாற்றம் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.’ இதை மேற்கோள்காட்டி கோவா மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ப.சிதம் பரம் தனது டிவிட்டரில், ‘பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியான கணித மேதை இங்கே இருக்கிறார்.

கோவாவில் 3.5 லட்சம் குடும்பங்களில் உள்ள ஒரு பெண்ணுக்கு மாதம் ரூ.5000 மானியம் என்றால் மாதாந்திரத்துக்கு ரூ.175 கோடி செலவாகும். ஆண்டுக்கு ரூ.2100 கோடி செலவாகும். 2020 மார்ச் இறுதி வரை ரூ.23,473 கோடி கடன் நிலுவையில் உள்ள கோவா மாநிலத்துக்கு இது ஒரு சிறிய தொகை’. ‘கோவாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் அல்லது கோவாவை கடவுளே காப்பாத்தணும்’ என்று விமர்சித்து குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: