குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான முதல் தனிநபர் மசோதா: நாடாளுமன்றத்தில் வருண் காந்தி தாக்கல்

பெரெய்லி:  பாஜ எம்பி வருண்காந்தி தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். விவசாயிகளின் ஒரு ஆண்டு போராட்டத்தின் விளைவாக அவர்களது வேண்டுகோளுக்கிணங்க 3 புதிய வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு சமீபத்தில் திரும்ப பெற்றது. எனினும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கையையும் அரசு ஏற்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்நிலையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான தனிநபர் மசோதாவை பாஜ எம்பியான வருண் காந்தி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா விற்கு ‘குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான விவசாயிகளின் உரிமை மசோதா 2021’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எம்பி வருண்காந்தி கூறுகையில், ‘இந்த மசோதாவின் கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்தவும் மற்றும் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவும் தனித்துறை உருவாக்கப்பட வேண்டும்.   இந்த மசோதா நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். விவசாயிகள் எந்த பயிரை விதைப்பது என்பதை முன்கூட்டியே அறிவித்து விலை குறித்த அறிவிப்புக்கள் வெளியிடப்படவேண்டும்’  என்றார்.

Related Stories: