×

இந்தியாவில் தீவிரவாதத்தை ஊக்குவித்து பாக். நடத்தும் மறைமுக போரிலும் வெல்வோம்: ராஜ்நாத் சிங் சூளுரை

புதுடெல்லி: ‘1971ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான நேரடிப் போரில் வென்றதைப் போல, பாகிஸ்தானில் தூண்டப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றி பெறும்’ என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். கடந்த 1971ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த போரின் காரணமாக, வங்கதேசம் தனிநாடாக உருவானது. கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதிக்கு, இந்திய ராணுவம் விடுதலை பெற்று தந்தது. இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது மற்றும் இந்தியா-வங்கதேசத்தின் நட்புறவை குறிக்கும் 50ம் ஆண்டு பொன்விழா ஆண்டை டெல்லி இந்தியா கேட் பகுதியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்த விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருந்தோம். ஆனால், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, விழாவை எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டது. இந்த விழா கொண்டாட்டம் தொடர்பாக பிபின் ராவத்திடம் பல்வேறு ஆலோசனை நடத்தி உள்ளேன். அவரது இழப்பு மிகப்பெரியது. விபத்தில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம்.

1971ம் ஆண்டு பேரில் உயிர்தியாகம் செய்த இந்திய வீரர்கள் ஒவ்வொருவரையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்த போரில், இந்திய ராணுவம் காட்டிய வீரம் ஒவ்வொரு இந்தியனுக்கும் எப்போதும் பெருமை சேர்க்கும் விஷயமாக உள்ளது. இந்த போர், பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரானது மட்டுமல்ல, அநீதி மற்றும் அட்டூழியங்களுக்கு எதிரானது. இது பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி மட்டுமல்ல, அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றியும் கூட.

இந்தப் போர் நமது ஜனநாயக மரபுகள், நீதியான நடத்தை மற்றும் நெறிமுறைகளுக்கு ஒரு சிறந்த உதாரணம். 1971ம் ஆண்டு போரில் பாகிஸ்தானின் அனைத்து திட்டங்களையும் இந்தியா முறியடித்தது. அந்த போருக்குப் பிறகு தற்போது, தீவிரவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்க பாகிஸ்தான் விரும்புகிறது. பயங்கரவாத அச்சுறுத்தலை வேரோடு பிடுங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நேரடி போரில் வென்றதைப் போல, பாகிஸ்தானால் தூண்டப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான மறைமுகப் போரிலும் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

பிபின் ராவத்தின் கடைசி வாழ்த்து செய்தி
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், 1971ம் ஆண்டு போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, 50ம் ஆண்டு போர் வெற்றி தின வாழ்த்து தெரிவித்த காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீடியோ எடுக்கப்பட்டிருந்தன. அந்த வீடியோ பதிவு, டெல்லி கேட் பகுதியில் நேற்று ஒளிபரப்பப்பட்டது. அதில் பிபின் ராவத், ‘‘நமது படைகளை எண்ணி நாம் பெருமை கொள்கிறோம். இந்த 50ம் ஆண்டு பொன்விழாவை ஒன்றிணைந்து கொண்டாடுவோம். உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்’’ என கூறி உள்ளார்.

ஏவுகணை பெயர்களை பாருங்கள்
ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘1971ம் ஆண்டு போர், மதத்தின் அடிப்படையில் இந்தியாவைப் பிரித்தது ஒரு வரலாற்றுத் தவறு என்பதைக் காட்டுகிறது. பாகிஸ்தானின் பிறப்பு ஒரு மதத்தின் பெயரில் நடந்தது. இந்தியா மீதான விரோத உணர்வு பாகிஸ்தானில் மிகவும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது, அது அதன் ஏவுகணைகளுக்குக் கொடுத்த பெயரிலேயே காணலாம். பாகிஸ்தானின் ஏவுகணைகளுக்கு இந்தியாவின் மீது படையெடுத்த கொடூரமான படையெடுப்பாளர்களான கவுரி, கஸ்னவி மற்றும் அப்தாலி ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. மறுபுறம், இந்தியாவின் ஏவுகணைகளுக்கு ஆகாஷ் (வானம்), பிருத்வி (பூமி) மற்றும் அக்னி (நெருப்பு) எனப் பெயரிடப்பட்டுள்ளது’ என்றார்.


Tags : Pak ,India ,Rajnath Singh Sulurai , India, Terrorism, Pakistan, Indirect War, Rajnath Singh, Sulurai
× RELATED பாக். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக...