×

நூற்றாண்டு பழமையான 8 ஆயிரம் கோயில்கள் புனரமைப்பு பணி தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை

சென்னை: நூற்றாண்டு பழமையான  8 ஆயிரம் கோயில்களை புனரமைப்பது தொடர்பான பணிகளை மேற்கொள்ள தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம் செய்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டவை. இக்கோயில்கள் கட்டிட கலையின் சிறப்புகளை பறைசாற்றுவதுடன், தமிழர்களின் நாகரிகத்தை வெளிப்படுத்துபவையாக உள்ளன. மேலும் பல்வேறு கோயில்களில் மூலிகை ஓவியங்களும், பழமை வாய்ந்த கல்வெட்டுகளும் உள்ளன. இவற்றை முறையாக புனரமைத்து பழமை மாறாமல் புதுப்பித்து பராமரிப்பது அவசியமாகும். இப்பணியினை அத்துறைச்சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனை பெற்று அவர்களது மேற்பார்வையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் அதன் பழமையினை பாதுகாக்க இயலும்.

 எனவே, இத்துறையில் பழமை வாய்ந்த கோயில்களை புனரமைப்பது தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அலுவலர்களை ‘தொல்லியல் ஆலோசகராக’ (Archaeological Advisor) நியமனம் செய்திட முடிவுசெய்துள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற அலுவலர்களை தொல்லியல் ஆலோசகராக ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திற்கும் நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது. காஞ்சிபுரம் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், ஈரோடு மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன், சேலம் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் செல்வராஜ், தஞ்சாவூர் மண்டல அலுவலகத்துக்கு ஓய்வு பெற்ற ஒன்றிய தொல்லியல் துறை உதவி கண்காணிப்பாளர் வாசுதேவன், வேலூர் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல்துறை பதிவு அலுவலர் கலைவாணன், விழுப்புரம் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற ஒன்றிய தொல்லியல்துறை துணை கண்காணிப்பாளர் தண்டபாணி, திருவண்ணாமலை மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற ஒன்றிய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன், திருச்சி மண்டலத்துக்கு மாநில தொல்லியல்துறை உதவி இயக்குனர் கணேசன், மதுரை மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை வல்லுநர் சாந்தலிங்கம், கடலூர் மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துறை காப்பாட்சியர் பரணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* தொல்லியல் ஆலோசகர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இணை ஆணையர் மண்டலத்திலுள்ள 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை ஆய்வு செய்து அவற்றின் தொன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்திட சம்பந்தப்பட்ட இணை ஆணையர் மூலம் ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
*  இந்த அலுவலர்கள் ஆணையர், இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர்களால் அறிவுறுத்தப்படும் கோயில்களை நேரில் ஆய்வு செய்து அவற்றை புனரமைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.
* அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய மற்ற பணிகள் குறித்து ஆணையரால் அவ்வப்போது வரையறை செய்ய வேண்டும்.
* மேலும் தங்கள் சரகத்திலுள்ள பழமைவாய்ந்த கோயில்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றவா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
* தொல்லியல் ஆலோசகர்கள் ஓராண்டிற்கு அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இதில் எது முன்னதோ அதுவரை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர்.
* வல்லுநர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்படுகிறது. வல்லுநர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியத்தினை கோயிலின் நிதியிலிருந்து வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது. பின்னர் தொகுப்பூதியத்தினை ஆணையர் பொதுநல நிதியிலிருந்து பெற்று கோயிலுக்கு திரும்ப வழங்கிட விதிகளின்படி உரிய முன்மொழிவினை அனுப்ப சம்பந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
*  நிர்வாக நலன் கருதி இந்த தொல்லியல் ஆலோசகர்களை முன்அறிவிப்பின்றி ஆணையர் பணி நீக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த கோயில்களை புனரமைப்பது தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அலுவலர்கள் ‘தொல்லியல் ஆலோசகராக’ நியமிக்கப்பட்டனர்.



Tags : Kumarakuruparan , Reconstruction work of 8 thousand century old temples Appointed by Archaeological Consultants: Commissioner Kumarakuruparan Action
× RELATED கோயில் சொத்துக்களை முறைப்படுத்த...