கூவம் தரைப்பால வெள்ளத்தில் பைக்குடன் அடித்து செல்லப்பட்ட புதுமாப்பிள்ளையின் உடல் மீட்பு: போதையில் சென்றதால் விபரீதம்

சென்னை: மதுரவாயல், ஓம்சக்தி நகரில் உள்ள கூவம் தரைப்பாலத்தில் வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் தடுப்புகளை மீறி தரைப்பாலத்தை பைக்கில் இருவர் கடந்து செல்ல முயன்றனர். அப்போது நிலைதடுமாறி விழுந்ததில் ஒருவர் மட்டும் தப்பித்தார். பைக்கை ஓட்டி வந்தவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். தகவலறிந்து கோயம்பேடு, ஜெ.ஜெ. நகர், கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவரை தீவிரமாக தேடினர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பைக்கை மட்டும் நேற்று முன்தினம் இரவு தீயணைப்பு துறையினர் மீட்டனர். இரவு நேரம் ஆனதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.  

நேற்று கோயம்பேடு தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் படகுகள் மூலம் கூவத்தில் தீவிரமாக தேடினர். அப்போது வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட நபர் அங்கிருந்த முட்புதரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், மதுரவாயலை அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த கவுதம் (26), இவரது கல்லூரி நண்பன் பெரம்பூரை சேர்ந்த அரிந்தர் (26) சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் கவுதமை பார்ப்பதற்கு வந்த அரிந்தர், கவுதமை அழைத்துக்கொண்டு கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திவிட்டு, இருவரும் பைக்கில் கூவத்தை கடந்தபோது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். அரிந்தர், சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து விட்டதாகவும் கவுதம் மட்டும் பைக்கோடு வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டதும் தெரியவந்தது. கவுதமின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த கவுதமுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: