ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரம் பதிவு ஊழல் இல்லா நிர்வாகத்திற்கு வழிவகுக்கும்: விஜயகாந்த் வரவேற்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், தாங்கள் வாங்கிய அசையா சொத்துகள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்களில் வாங்கிய சொத்துகள் விவரங்களை வரும் 31ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற செயல் வெளிப்படை தன்மையும், ஊழல் இல்லாத நிர்வாகத்தையும், கொண்டு செல்ல வழிவகுக்கும். ஐஏஎஸ் அதிகாரிகள் என்பவர்கள் நாட்டை வழிநடத்தும் உயர்ந்த பதவிகளில் உள்ளதாகவும், அவர்களே வெளிப்படை தன்மையோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டால், அவர்களுக்கு கீழ் செயல்படும் மற்ற அதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். இந்த நடைமுறை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அனைத்து அரசு உயரதிகாரிகளும், தங்களது சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதுபோன்ற ஓர் அறிவிப்பை வெளியிட்ட தலைமை செயலாளர் இறையன்புவிற்கு தேமுதிக சார்பில் நன்றி. இந்த நடைமுறை பெயரளவிற்கு இல்லாமல் இதில் விடா முயற்சியுடன், கண்டிப்புடன் செயல்பட்டால் வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகம் அமைவதில் ஐயம் இல்லை.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: