நீரிழிவு, வளர்சிதை மாற்றம் பிரிவில் எம்டி பட்டப்படிப்பை தொடங்க அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய அரசுக்கு கடிதம்

சென்னை: தமிழகத்தில் எம்.டி, நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம் பட்டப் படிப்பைத் தொடங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமஒன்றிய அமைச்சர் மன்சுக் மண்டாவியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறாகும். இது அரசாங்கத்திற்கும் தனிநபருக்கும் சுகாதார செலவினங்களை அதிகரிக்க செய்கிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக, உலகில் நீரிழிவு நோயின் மிகப்பெரிய பாதிப்பு இந்தியாவில் உள்ளது. சுமார் 77 மில்லியன் அதாவது 7.7 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 75 மில்லியன் (7.5 கோடி) பேர் தொடக்க நிலை நீரிழிவு அறிகுறிகளுடன் உள்ளனர். அவசரத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், பாதிப்பு அதிகரிக்கும். இதனால் நாட்டின் சுமையும் அதிகரிக்கும்.

தமிழகத்தில் சர்க்கரை நோயின் பாதிப்பு 10.4% ஆக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, நமது மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் தங்கள் சுகாதாரக் கொள்கைகளில் நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களைக் கண்டறிந்து ஆரம்பத்திலேயே சிகிச்சை செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. எனவே, எம்டி (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) படிப்பைத் தொடங்குவது, நாட்டில் இந்த சிறப்புத் துறையில் கிடைக்கும் தொழில்முறை சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அனைத்து சுகாதார சேவைகளிலும் நீரிழிவு சிகிச்சை பிரிவுகளை உருவாக்கும் மாநில மற்றும் ஒன்றிய அரசின் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்த இது உதவும்.

மேலும் இது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட புற மருத்துவமனைகளிலும் நீரிழிவு சிகிச்சை பிரிவுகளை உருவாக்க உதவும். 1986ம் ஆண்டு முதல் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் டயாபெட்டாலஜியில் முழு நேர 2 வருட நீரிழிவு டிப்ளமோ படிப்பைத் தொடங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். ஒரு புதிய எம்டி (நீரிழிவு ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) பாடத்திட்டத்தை உருவாக்குவது ஏற்கனவே உள்ள அங்கீகரிக்கப்பட்ட நீரிழிவு மருத்துவத்தில் டிப்ளமோ இடங்களை டிகிரி இடங்களாக மாற்ற உதவுகிறது.

இதனால் எம்சிஐ விதிமுறைகளின்படி இந்த சிறப்புப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களை உருவாக்க உதவுகிறது. எனவே எம்டி, நீரிழிவு ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம் பட்டப் படிபை தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் நாங்கள் முன்மொழிந்து கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் நீரிழிவு மருத்துவத்தில் பட்டயபடிப்பை, எம்.டி பட்டப்படிப்பு இடங்களாக மேம்படுத்தவும் எங்கள் மாநிலத்தில் உள்ள பிற நிறுவனங்களில் இந்தப் படிப்பைத் தொடங்கவும் உதவுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: