×

7.3 கோடி பேர் பின்தொடரக்கூடிய பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்தது யார்? கிரிப்டோகரன்சியை எதிர்ப்பதால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?

புதுடெல்லி: உலகம் முழுவதிலும் சுமார் 7.3 கோடி பேர் பின்தொடரக்கூடிய பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக கிரிப்டோகரன்சிக்கு எதிராக இந்திய அரசு குரல் கொடுப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட செயலா என சந்தேகம் எழுந்துள்ளது. உலக அளவில் சமூக வலைதளங்களில் உடனுக்குடன் செய்திகளை பகிரும் அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடியும் குறிப்பிடத்தக்கவர். இதனால், டிவிட்டரில் பிரதமர் மோடியை 7.34 கோடி பேர் பின்தொடர்கின்றனர். வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பு, இரங்கல் செய்திகள், நாட்டு மக்களுக்கான முக்கிய தகவல்கள், அறிவுரைகள் போன்ற பல தகவல்களை பிரதமர் மோடி தனது @narendramodi என்ற டிவிட்டர் கணக்கு மூலம் பகிர்ந்து வருகிறார். இது அவரது தனிப்பட்ட டிவிட்டர் கணக்காகும்.

இந்நிலையில், பிரதமர் மோடி டிவிட்டர் கணக்கு நேற்று சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. அதை ஹேக் செய்த நபர்கள், ‘இந்தியா பிட்காயினை சட்டப்பூர்வமாக்க அங்கீகரித்துள்ளது. ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக 500 பிட்காயின்களை வாங்கி, அது நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கப் போகிறது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பலரும் ரீடிவிட் செய்துள்ளனர். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக ஒன்றிய அரசு தரப்பில் டிவிட்டர் நிர்வாகம் முறையிடப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் சர்ச்சைக்குரிய அந்த பதிவு நீக்கப்பட்டு, பிரதமர் மோடியின் கணக்கு மீட்கப்பட்டது.

இது குறித்து பிரதமர் அலுவலக டிவிட்டர் கணக்கில், ‘பிரதமர் மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு சிறிது நேரத்திற்கு முடக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து டிவிட்டருக்கு தகவல் தெரிவித்து, உடனுக்குடன் கணக்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட சிறிது நேரத்தில் பிரதமரின் கணக்கில் பகிரப்பட்ட தகவலை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது. இது குறித்து டிவிட்டர் நிர்வாகம் வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் அலுவலகத்துடன் எங்கள் குழுவினர் 24 மணி நேரமும் தொடர்பில் உள்ளனர். பிரதமரின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட தகவல் கிடைத்த உடனே உடனுக்குடன் அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது’ என கூறி உள்ளது.

பிரதமரின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு செப்டம்பரிலும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை ஹேக்கர்கள், கிரிப்டோகரன்சிக்கு ஆதரவான செய்தியை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் அனைத்து கிரிப்டோகரன்சிக்கும் தடை விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதாவும் கொண்டு வரப்பட உள்ளது. மேலும், சமீபத்தில் நடந்த உலக தலைவர்களுடனான 3 வீடியோ கான்பரன்சிங் சந்திப்பில் பிரதமர் மோடி, கிரிப்டோகரன்சிக்கு எதிராக பேசி உள்ளார். கிரிப்டோகரன்சியை முறைப்படுத்த உலகளாவிய நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதனால், கிரிப்டோகரன்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக இந்த ஹேக்கிங் சம்பவம் நடந்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

* இந்தியாவில் பிரதமரின் டிவிட்டர் கணக்கே ஹேக் செய்யப்படும்போது, பொதுமக்களின் ஆதார் தகவல்கள் மட்டும் பாதுகாப்பாக இருக்கும் என எப்படி நம்ப முடியும் என காங். செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.
* இந்தியாவில் சைபர் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருப்பதையே, மோடியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரம் வெளிச்சம் போட்டு காட்டுவதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன.

* காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் இன்று திறப்பு
பிரதமர் மோடியின் சொந்த மக்களவை தொகுதியான உபி மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில், ரூ.339 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட ஆலய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். 5.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3000 துறவிகள், மத தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Tags : Modi ,Twitter , Who hacked Prime Minister Modi's Twitter account which has 7.3 crore followers? Is there a warning against opposing cryptocurrency?
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...