கே.டி.உதயம், டாக்டர் பினுலால் சிங்-க்கு பதவி; குமரியில் காங். தலைவர்கள் மாற்றம் ஏன்?.. பரபரப்பு தகவல்கள்

நாகர்கோவில்: குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மாற்றப்பட்டு புதிய தலைவர்களாக கே.டி.உதயம், டாக்டர் பினுலால்சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக வக்கீல் ராதாகிருஷ்ணன், மேற்கு மாவட்ட தலைவராக தாரகை கத்பர்ட் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். மேற்கு மாவட்ட தலைவராக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ பணியாற்றி வந்த நிலையில் கடந்த சட்டமன்ற-மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் அவர் மாற்றப்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு புதிய தலைவராக தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாற்றப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு நிலவி வந்தது. அதே வேளையில் மாநில தலைவர் புதியதாக நியமிக்கப்படும்போது தான் மாற்றம் நிகழும் என்றும் கட்சியினர் கூறி வந்தனர். மேலும்  3 எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ஒப்புதலை பெற்று புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்களை அதிரடியாக மாற்றம் செய்து கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி மேற்கு மாவட்ட தலைவராக டாக்டர் பினுலால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாவட்ட தலைவராக கே.டி.உதயம் நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் நகர காங்கிரஸ் தலைவர் பதவி நவீன்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த தாரகை கத்பர்ட் காங்கிரஸ் மாநில பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 8 மாதங்களாக மேற்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக 8 மாதங்கள் மிக திருப்தியாக மனதுக்கு நிறைவாக கட்சிக்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றினேன், இதில் என்னுடன் பயணித்த அனைத்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் மாநில தலைவர் நியமனம் புதியதாக நடைபெறும்போது மாவட்ட தலைவர்கள் மீண்டும் மாற்றப்படலாம் என்ற பேச்சும் கட்சி வட்டாரத்தில் உள்ளது.

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கிழக்கு மற்றும் மேற்கு  மாவட்ட தலைவர்கள் மாற்றம் நிகழ்ந்துள்ளது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  3 எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஒப்புதலை பெற்று புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது. குமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகள், 3 நகராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு நகராட்சி ஆகியவற்றுக்கும் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: