×

குரங்குக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய கார் டிரைவர்: பெரம்பலூரில் நெகிழ்ச்சி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஒதியம் சமத்துவபுரம் பகுதிக்கு கடந்த 9ம் தேதி குரங்கு குட்டி ஒன்று சுற்றித்திரிந்தது. அந்த குரங்கை தெரு நாய்கள் துரத்தி கடித்ததில் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. பின்னர் நாய்களுக்கு பயந்து அந்த குரங்கு ஒரு மரத்தில் ஏறி பரிதாபமாக நின்றது. இதனை கண்ட அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் பிரபு(38)  உடனடியாக அந்த குரங்கினை மரத்தில் இருந்து மீட்டு தண்ணீர் கொடுக்க முயன்றார். ஆனால் குரங்கு தண்ணீர் குடிக்காமல், மயக்க நிலைக்கு சென்று உயிருக்கு போராடியது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த பிரபு, குரங்கை காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக ஈடுபட்டார். மனிதனுக்கு அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சை போல், குரங்கின் நெஞ்சில் கை வைத்து அழுத்தியும், குரங்கின் வாயோடு, தனது வாயை வைத்து தன்னுடைய மூச்சுக்காற்றை செலுத்தியும் முதலுதவி செய்தார். இதையடுத்து உடனடியாக அவர் குரங்கை, தனது மோட்டார் சைக்கிளில் வைத்து, அருகே உள்ள பெரம்பலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பின்னர் அந்த குரங்கிற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். இதையடுத்து அந்த குரங்கு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் உயிருக்கு போராடிய குரங்கிற்கு டிரைவர் பிரபு முதலுதவி அளிக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உயிருக்கு போராடிய குரங்குக்கு முதலுதவி செய்த பிரபுவை அப்பகுதி மக்கள்  பாராட்டி வருகின்றனர்.

Tags : Perambalur , Car driver rescues first aid for monkey: Flexibility in Perambalur
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...