×

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் புகார் போர்ஜரி வழக்கில் யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது: சென்னை அழைத்து வர முடிவு; மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை

சென்னை: தனியார் தொலைக்காட்சி அளித்த புகாரின் அடிப்படையில் போர்ஜரி வழக்கில், யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மதுரையை சேர்ந்த மாரிதாஸ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் பற்றியும், சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சியின் நிர்வாகி அனுப்பியதாக இ-மெயிலை காண்பித்து பேசியிருந்தார். இதையடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாகி தான் அப்படியொரு மின்னஞ்சலை அனுப்பவே இல்லை என்றும், போர்ஜரி செய்து மோசடியாக மெயில் ஒன்றை மாரிதாஸ் வெளியிட்டதாக  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

மேலும் மாரிதாஸ் போலியான இ-மெயிலை காண்பித்து, ஊழியர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருந்தார். அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி, கம்ப்யூட்டரை பயன்படுத்தி போர்ஜரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மாரிதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்தார்.

இதனால், மதுரையில் வைத்து மாரிதாஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாரிதாஸ் தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியின் நிர்வாகி அளித்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று மீண்டும் மாரிதாஸை கைது செய்துள்ளனர். இதனையடுத்து மாரிதாஸை போலீசார் தேனி சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Maridas ,Chennai , YouTuber Maridas re-arrested in private TV company complaint porgy case: decision to bring him to Chennai; Federal criminal action
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!