டேராடூன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத்தின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8ம் தேதி நடந்த எம்ஐ17வி5 ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா, 11 ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது உடல்கள், 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் டெல்லி கன்டோன்மெண்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் அவர்களது மகள்கள் கிரித்திகா, தாரிணி இறுதி சடங்கு செய்த பின் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிபின் ராவத், மதுலிகா ராவத் அஸ்தி அவர்களின் மகள்கள் கிரித்திகா மற்றும் தாரிணியிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அஸ்தியை தங்கள் சொந்த மாநிலமான உத்தரகாண்ட் எடுத்து சென்ற குடும்பத்தினர் அங்கு ஹரித்துவாரில் ஓடும் கங்கையில் இருவரின் அஸ்தியையும் கரைத்தனர்.