×

கேரள பல்கலையில் அரசியல் தலையீடு வேந்தர் பதவியில் இருந்து விலகி விடுகிறேன்: முதல்வருக்கு கவர்னர் ஆரிப் முகமதுகான் கடிதம்

திருவனந்தபுரம்: பல்கலைக்கழக செயல்பாடுகளில் அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதால், வேந்தர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கூறி, கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு அம்மாநில கவர்னர் ஆரிப் முகமதுகான் கடிதம் அனுப்பியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கண்ணூர் பல்கலை துணை வேந்தராக இருந்த கோபிநாத் 60 வயது ஆனதையடுத்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஆனால் பல்கலைக்கழக சட்டத்தை மீறி  மீண்டும் இவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கான கோப்பில் கையெழுத்திட கேரள அரசு, கவர்னரை நிர்பந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேந்தர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கூறி கவர்னர் ஆரிப் முகம்மது கான் முதல்வர் பினராய்  விஜயனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: ‘சமீபகாலமாக பல்கலைக்கழக செயல்பாடுகளில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது. சட்டத்தை மீறி பல நியமனங்கள் நடைபெறுகின்றன. இதை ஏற்று கொள்ள முடியாது. பல்கலைக்கழக சட்டத்தின்படி 60 வயதுக்கு மேற்பட்டவரை துணை வேந்தராக நியமிக்க முடியாது. ஆனால் கண்ணூர் பல்கலை கழகத்தில் ஓய்வு பெற்ற கோபிநாத் 60 வயது ஆன பின்னரும் மீண்டும் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானிய  குழு சட்டத்தின்படி 60 வயது ஆனாலும் துணை வேந்தராக நியமிக்கலாம் என்று கேரள அரசு குறிப்பிடுகிறது. எனவே வேந்தர் பதவியை அவசர சட்டம் மூலம் நீங்களே( முதல்வர்) எடுத்து கொள்ளலாம். அல்லது நானாகவே வேந்தர் பதவியில் இருந்து விலகி விடுகிறேன். இவ்வாறு அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் கடிதம் எழுதியது மிகவும் அசாதாரண நடவடிக்கை என கூறப்படுகிறது.இதற்கிடையே கவர்னர் கடிதம் கிடைத்த உடன்  அவரை சமரசம் செய்வதற்காக நிதி அமைச்சர் பாலகோபால் மற்றும் தலைமை செயலாளர் ஜாய்  ஆகியோரை முதல்வர் பினராய் விஜயன் அனுப்பி வைத்தார். ஆனால் எடுத்த முடிவில் இருந்த பின்வாங்க போவதில்லை என்று கவர்னர் கூறிவிட்டார்.

* டெல்லி விரைந்தார்
கவர்னர் அவசரமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு நிருபர்களிடம் கூறுகையில், ‘கேரளாவில் பல்கலை கழகங்களில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பல்கலைக்கழக விவகாரங்களில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக தான் கவர்னர் வேந்தராக நியமிக்கப்படுகிறார். நான் தீவிரமாக முயற்சித்தும் அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. எனது கைகளை கட்டிப்போட அரசு நினைக்கிறது. இதனால் தான் நான் வேந்தர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறினேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

* பாஜ, காங்கிரஸ் கண்டனம்
கவர்னரின் இந்த கடிதம் கேரள அரசியலில் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சி தலைவர் சதீசன், காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, பாஜ மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோர் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளனர்.

Tags : University of Kerala ,Vander ,Governor ,Arif Mohammad Khan , Political Interference in Kerala University I will resign from the post of Vander: Governor Arif Mohammad Khan's letter to the Chief Minister
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...