டெல்டாவை போல மோசம் கிடையாது ஒமிக்ரான் வைரசால் எந்த பாதிப்பும் இல்லை: வீட்டிலேயே குணமடைவதாக தென் ஆப்ரிக்கா டாக்டர்கள் தகவல்

ஜோகன்னஸ்பர்க்: ‘ஒமிக்ரான் வைரஸ் டெல்டாவை போல மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை, பல பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் கூட இல்லாமல் குணமடைகின்றனர்’ என தென் ஆப்ரிக்காவின் மூத்த டாக்டர்கள் கூறி உள்ளனர். தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் ஒமிக்ரான் எனும் புது வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது மற்ற அனைத்து கொரோனா வைரஸ்களைக் காட்டிலும் வீரியமிக்கதாகவும் ஆபத்தானதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இதனால் உலகெங்கிலும் மீண்டும் கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. பல நாடுகள், ஒமிக்ரான் வைரஸ் பரவிய நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளன. தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரசை பார்த்து பயப்பட வேண்டியதில்லை, அது எதுவும் செய்யாது என தென் ஆப்ரிக்காவின் மூத்த டாக்டர் அன்பன் பிள்ளை கூறி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக கடந்த 2 வாரங்களாக சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இது டெல்டா வகை வைரசை காட்டிலும் மிதமானது என்றே நிபுணர்களும், டாக்டர்களும் கருதுகின்றனர். ஒமிக்ரானால் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனாலும், பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. பலரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை, வீட்டு சிகிச்சையிலேயே குணமடைந்து விடுகின்றனர். பெரும்பாலானோர் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து 10-14 நாட்களில் குணமடைகின்றனர்’’ என்றார்.

ஆப்ரிக்கா சுகாதார ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் வில்லிம் ஹனேகோம் கூறுகையில், ‘‘வயதானவர்கள், பிற துணை நோய்கள் இருப்பவர்கள் கூட ஒமிக்ரானால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. இப்போது வரை இந்த வைரஸ் மிதமான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தி வருகிறது. ஆனால் 2 வார கால புள்ளி விவரங்களை வைத்து முடிவுக்கு வந்து விட முடியாது. இது ஆரம்ப கட்டம் தான். இதை இறுதி செய்ய மேலும் சில வாரங்கள் ஆகும்’’ என்றார். இதற்கிடையே உலகெங்கிலும் உள்ள பல நிபுணர்கள் கூறுகையில், ‘‘கொரோனா தடுப்பூசியை தாண்டி பாதிக்கும் திறனுள்ளதாக ஒமிக்ரான் இல்லை. டெல்டா பரவலின் போது நோயாளிகள் மூச்சு திணறல், ஆக்சிஜன் குறைபாடு போன்ற கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர். ஒமிக்ரானில் உடல் வலி, லேசான காய்ச்சல், தொண்டை கரகரப்பு மட்டுமே உள்ளது’’ என்கின்றனர்.

* தென் ஆப்ரிக்காவில் சமீபத்திய வாரங்களில் 30 சதவீதம் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது முந்தைய டெல்டா அலையின் முதல் வார பாதிப்பை காட்டிலும் பாதி அளவு எண்ணிக்கை குறைவாகும்.

* கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய சராசரி நாட்கள் எண்ணிக்கை 2.8 ஆக தற்போது உள்ளது. முந்தைய அலையில் இது 8 நாட்களாக இருந்தது.

* மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே தற்போது இறந்துள்ளனர். முந்தைய அலையில் இது 20 சதவீதமாக இருந்தது.

* தடுப்பூசி போடாமல் இருந்தால் ஆபத்து

தென் ஆப்ரிக்காவில் தினசரி பாதிப்பு 20 ஆயிரமாக அதிகரித்து வருகிறது. வாரத்திற்கு சராசரியாக தினசரி பாதிப்பில் 200 எண்ணிக்கைகள் அதிகரிக்கின்றன. தென் ஆப்ரிக்காவில் தற்போதைய மொத்த தொற்று பாதிப்பில் 70% பேருக்கு ஒமிக்ரான் வைரசே காரணம். சராசரியாக ஒருவரிடமிருந்து 2.5 பேருக்கு வைரஸ் தொற்று பரவுகிறது. இதற்கு முன் வேறெந்த வகை வைரசும் இவ்வளவு வேகமாக பரவியதில்லை. வைரஸ் தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். எனவே தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒமிக்ரானால் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படலாம் என்கின்றனர் டாக்டர்கள்.

Related Stories: