புத்தாண்டில் அதிக பக்தர்களை அனுமதிக்க முடிவு ரூ.7.55 கோடியில் திருப்பதி மலைப்பாதை சீரமைப்பு: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் தகவல்

திருமலை: திருப்பதி மற்றும் திருமலையில் மலைப்பாதையை சீரமைக்க ரூ.7.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, புத்தாண்டில் அதிக பக்தர்களை அனுமதிக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறினார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் செயலதிகாரி ஜவகர், அறநிலையத்துறை முதன்மை செயலாளர்  வாணி மோகன், திருப்பதி புறநகர் மேம்பாட்டு வாரிய தலைவர் பாஸ்கர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுப்பா ரெட்டி கூறியதாவது: ‘கொரோனா பாதிப்பு குறைவதைக் கருத்தில் கொண்டு புத்தாண்டு தரிசனத்தில் அதிக பக்தர்களை அனுமதிக்கவும், குறைந்த எண்ணிக்கையில் சுப்ரபாதம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்கவும் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து அனுமதி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீப உற்சவம்,  கல்யாண உற்சவம் போன்ற இந்து தர்ம நிகழ்ச்சிகள் ஆந்திரா, தெலங்கானா ஆகிய தெலுங்கு மாநிலங்கள் மற்றும் கர்நாடகா, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் மேற்கொள்ளப்படும். தேவஸ்தான தகவல் தொழில்நுட்ப பிரிவு மேலும் பலப்படுத்தப்படும்.

கனமழையால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மலைப்பாதையில் சாலைகள் புனரமைக்க ரூ.3.95 கோடியிலும், ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதை ரூ.3.60 கோடியிலும் சீரமைக்கப்பட உள்ளது. பக்தர்களிடம் மொட்டையடிக்கும் சவர தொழிலாளர்களுக்கு ஒரு மொட்டைக்கு ரூ.11ல் இருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நந்தகுமார், சங்கர், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் தமிழகம், புதுச்சேரி தேவஸ்தான ஆலோசனை குழு உறுப்பினர் சேகர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Related Stories: