×

கோ-ஆப்டெக்ஸ் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.10ஆயிரம் ஊதியம்: நிர்வாகம் உத்தரவு

சென்னை: கோ-ஆப்டெக்ஸில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸில் 175 விற்பனை நிலையம், 8 ஒப்பந்த விற்பனை நிலையம், 18 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இதில், 2,500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. ஆனால், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக விற்பனை நிலையங்களிலும், சேமிப்பு கிடங்குகளிலும் தற்காலிக பணியாளர்களை ஒதுக்கீடு செய்து வருகிறது.

அதன்படி தற்போது வரை 500க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், 200க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் என மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தற்காலிக பணியாளர்களின் ஆரம்ப கட்ட ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

அதன்படி தற்காலிக பணியாளர்களுக்கு தலைமை அலுவலக உத்தரவுப்படி அந்தந்த மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச கூலி தொகையை வழங்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்து உறுதி செய்துள்ளது. இதை தொடர்ந்து, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் அனைத்து மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தற்காலிக பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், சம்பந்தப்பட்ட ஆட்சியர் அலுவலகம் நிர்ணயத்த ஊதியத்தை விட குறையாமல் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஆட்சியர் நிர்ணயித்த ஊதியத்தை பல மண்டல மேலாளர்கள் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு சில மண்டல மேலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் மாதம் ரூ.10 ஆயிரம் வரை கூலியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். ஏற்கனவே, ஒரு சில ஊழியர்கள் ரூ.18 ஆயிரம் பெற்று வருகின்றனர். எனவே, அனைவருக்கும் என்பதை மாற்றி குறைந்தபட்சம் ஊதியம் ரூ.10 ஆயிரம் என அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Co-optex , Co-optex Temporary Employees Pay Rs.10,000: Management Order
× RELATED வலங்கைமானில் மூடிக்கிடக்கும் கோஆப்டெக்சை மீண்டும் திறக்க வலியுறுத்தல்