முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் தி.மு.கவில் இணைவது குறித்து முதல்வர் தான் முடிவு எடுப்பார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் திமுகவில் இணைவது குறித்து முதல்வர் தான் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மகாகவி பாரதியார் 140வது பிறந்த நாளையொட்டி சென்னை கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம் , பி.கே.சேகர்பாபு மு.பெ.சுவாமிநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள், மயிலை தா.வேலு, ஐட்ரிம்ஸ் மூர்த்தி பிரபாகர் ராஜா, தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே நடைபெற்ற ஜதிபல்லக்கு ஊர்வலத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு மற்றும் முதல்வரின் செயல்பாடுகள் குறித்து இங்கு மட்டுமல்ல, அண்டை மாநில பத்திரிகைகளும், ஊடகங்களும் தொடர்ந்து பாராட்டும் அளவிற்கு செயல்படுவது தமிழகத்திற்கு பெருமை தருகிறது. எனவே தமிழக முதல்வரை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை வசைபாடாமல் இருங்கள் என்று நீதிபதி புகழேந்தி கூறியது, தமிழக அரசுக்கு சிறப்பான சான்றாகும்.  

இதையெல்லாம் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத அண்ணாமலை போன்ற ஒரு சிலர் வேண்டுமென்றே இந்த அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த பார்க்கின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் முதல்வரை பின்பற்றும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் உள்ளது. அந்த வகையில் யார் வேண்டுமானாலும் திமுகவில் இணைந்து செயல்படலாம். அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் எதிர்காலத்தில்  எங்களோடு இணைந்து செயல்படுவது குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் பாராட்டு: முன்னதாக இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் பேசுகையில், ‘ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த 2,000 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு அமைச்சர் சேகர்பாபு தனது பணியில் சிறப்பாக செயல்படுகிறார் என பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: