புதுச்சேரி தலைமை செயலாளருக்கு வாரன்ட் பிறப்பித்தது ஐகோர்ட்

சென்னை: புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக் (குடிநீர் வினியோகம் மற்றும் காய்கறிகள் விற்பனை நிறுவனம்) 2007 வரை லாபத்தில் இயங்கியது. பாசிக் நிறுவனத்திற்கு சேர்மன்கள் நியமிக்கப்பட்ட பிறகு அந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இதனால், அந்நிறுவனத்தில் வேலை செய்த 48 ஊழியர்கள் சென்னை ஐகோர்ட்டில் 2013ல் வழக்கு தொடர்ந்தனர். கடந்தாண்டு ஜூலை 14ல் அளித்த தீர்ப்பில், 3 மாதங்களுக்குள் சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனாலும் சம்பளம் தரவில்லை. இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 8 பாசிக் ஊழியர்கள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காத தலைமை செயலர் அஸ்வனிகுமார், துறை செயலர் ரவிபிரகாஷ், வேளாண் இயக்குனர் பாலகாந்தி, பாசிக் மேலாண் இயக்குனர் சிவசண்முகம் ஆகியோர் மீது கடந்த செப்டம்பர் 30ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி தண்டபாணி விசாரித்து, அவர்கள் டிசம்பர் 10ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்திருந்தார். நேற்று முன்தினம் தலைமை செயலர் அஸ்வனிகுமார், துறை செயலர் ரவிபிரகாஷ் மட்டும் ஆஜராகவில்லை. அவர்களுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.

Related Stories: