பாரதியாரின் கனவுகள் நனவாக உறுதியேற்போம்: ராமதாஸ் டிவிட்

சென்னை: பாரதியாரின் கனவுகள் நனவாக உழைப்பதற்கு உறுதியேற்று கொள்வோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எட்டயபுரத்தில் பிறந்து எட்ட முடியாத உயரங்களை தொட்ட பாரதியாரின் 140வது பிறந்தநாள் இன்று. தேச விடுதலை, பெண் விடுதலை, கல்வி, விளையாட்டு என அத்தனை குறித்தும் தொலைநோக்கு கொண்டிருந்த மாமனிதன். அவனது பிறந்தநாளில் நினைவுகூர்வது நமக்கு பெருமை. பாரதியார் மறைந்து நூறாண்டு ஆனாலும் அவனது கவிதை நெருப்பும், கருத்து நெருப்பும் இன்றும் கனன்று கொண்டே தான் இருக்கின்றன. அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அவனது எழுத்துகளை தான் கடன் வாங்க வேண்டியுள்ளது. வெல்க பாரதியார். நனவாகட்டும் அவனது கனவுகள்’ என தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: கேட்கும்போதே உணர்வூட்டும் ஒப்பற்ற கவிதைகளைப் படைத்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும்பங்காற்றிய மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் இன்று. தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் மொழிமீது மாளாத பற்று என தனித்துவ கவிஞராக திகழ்ந்த அந்த மகாகவிஞனை ஒவ்வொரு கணமும் போற்றி கொண்டாடிடுவோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: