×

போயஸ் தோட்ட இல்லத்தில் வாழ்ந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை ஜெயலலிதா கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தூக்கி சென்றுவிட்டனர்: சசிகலா, எடப்பாடி மீது தீபா பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா வாழ்ந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல், அவர் பயன்படுத்திய கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தூக்கி சென்று விட்டனர் என்று சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது தீபா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை முந்தைய அதிமுக அரசு, நினைவு இல்லமாக அறிவித்து அரசாணை வெளியிட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும்விதமாக வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பான உத்தரவுகளை எடப்பாடி தலைமையிலான அப்போதைய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக, வேதா நிலையத்துக்கு இழப்பீடாக ரூ.67.90 கோடி நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை எடப்பாடி பழனிசாமி நினைவு இல்லமாக அறிவித்ததுடன், திறந்தும் வைத்தார். ஆனால், நீதிமன்றம் ஜெயலலிதா வீட்டிற்குள் பொதுமக்கள் சென்று பார்க்க தடை விதித்தது. மேலும், ஜெயலலிதா வீட்டை பூட்டி சாவியை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில் வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் தீபக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு சென்னையில் நினைவிடம் உள்ள நிலையில் நினைவு இல்லம் அமைப்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் ஆகும். எனவே, அரசு வேதா நிலையத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வேதா இல்லத்தின் சாவியை ஜெ.தீபா மற்றும் தீபக்கிடம் 3 வாரத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார். இதை தொடர்ந்து, வேதா இல்லத்தின் சாவியை சென்னை மாவட்ட கலெக்டர் விஜயாராணி நேற்று முன்தினம் தீபாவிடம் ஒப்படைத்தார். சாவியை பெற்றுக் கொண்ட தீபா, உடனடியாக நேற்று முன்தினம் காலையிலேயே போயஸ் தோட்ட இல்லத்துக்கு கணவர் மாதவனுடன் வந்தார்.

அவர் வந்து சில நிமிடங்களில் தீபக்கும் வந்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இருவரும் ஜெயலலிதா வீட்டு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். ஆனால், ஜெயலலிதா வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, செல்போன் வெளிச்சத்தில் தீபா மற்றும் தீபக் ஆகியோர் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தனர். 3 மணி நேரம்ஜெயலலிதா வீட்டை சுற்றி பார்த்தனர். பின்னர் ஜெயலலிதா வீட்டின் பால்கனியில் இருந்தபடி தீபா கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து, தீபா நிருபர்களிடம் கூறியதாவது: 4 ஆண்டுகள் கழித்து வீட்டிற்குள் வந்துள்ளேன். ஜெயலலிதா இறந்த அன்று கூட என்னை வீட்டிற்குள் விடவில்லை.  ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் அவரது வாரிசுகள் வாழ வேண்டுமென்றுதான் அதிமுக தொண்டர்கள் நினைப்பார்கள். தற்போதைக்கு இந்த வீட்டில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன். வேதா இல்லம் கிடைப்பதில் பல சிரமங்கள், பிரச்னைகளை சந்தித்தோம். அதை சொல்ல வார்த்தைகளே இல்லை. வேதா இல்லம் அரசுடைமை ஆக வேண்டுமென மேல்முறையீடு செய்து உள்ளனர். எந்த ஒரு பிரச்னையையும் நானும், தீபக்கும் இணைந்து சட்ட ரீதியாக சந்திப்போம்.

ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களில் நிறைய பொருட்களை காணவில்லை. ஜெயலலிதா வாழ்ந்ததற்கான அடையாளங்கள் வீட்டிற்குள் எதுவுமே இல்லை. அவர் பயன்படுத்திய கட்டில் கூட இல்லை. வீடு காலியாகவே உள்ளது. சசிகலா வாழ்ந்த அடையாளங்கள் மட்டுமே உள்ளது. ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுத்துச் சென்றிருப்பார்கள் என்ற சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா பெயரில் விரைவில் அறக்கட்டளை தொடங்க உள்ளேன். ஆனால் இந்த வீட்டை அறக்கட்டளையாக மாற்றும் எண்ணம் இல்லை. இந்த வீட்டிற்கு குடிபெயர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக இந்த வீட்டில் தங்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த வீட்டிற்கு பராமரிப்பு பணிகள் செய்வதற்கு நிறைய உள்ளது. அதை செய்ய வேண்டும்.

வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும். இந்த வீட்டை பார்த்தாலே ஏதோ ஒரு சந்தேகம் எழுகிறது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக சசிகலா மேல் சந்தேகம் உள்ளது. அவரையும் விசாரிக்க வேண்டும். மரணம் தொடர்பான விசாரணையை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும். ஜெயலலிதாவுடன் எங்களை நெருங்க விடாமல் தடுத்தவர் சசிகலாதான். இவ்வாறு அவர் கூறினார். ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுத்துச் சென்றிருப்பார்கள் என்ற சந்தேகம் உள்ளது.

Tags : Boise ,Jayalalithaa ,Sasikala ,Edappadi , No sign of Boise living in plantation
× RELATED எடப்பாடி கொடுத்த ‘சீக்ரெட் சிக்னல்’...