டாஸ்மாக் கடைகளில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மதுபானம் வழங்கினால் நடவடிக்கை: திருவள்ளூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் சமூக பாதுகாப்பை கடைபிடிக்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சினிமா திரையரங்கம், டாஸ்மாக் கடை, மால், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தயிருக்க வேண்டும் என எச்சரித்து இருந்தனர். இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் நகராட்சி ஆணையர் சி.வி.ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட நிர்வாகம் அனுப்பியிருந்த சுற்றறிக்கையை கடையில் மாட்டாமல் வைத்திருந்ததால் பணியில் இருந்த ஊழியரை எச்சரித்து சுற்றறிக்கையை பொதுமக்கள் பார்வையில் படும்படி மாட்டிவைத்தார்.

மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விநியோகிக்க வேண்டும் என எச்சரித்தார். அப்போது, மதுபானம் வாங்க வருபவர்கள் தகராறில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். தகராறில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் சி.வி.ரவிச்சந்திரன் எச்சரித்தார். இந்த ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் யுவராஜ், நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், மருத்துவர் வீணா ஆகியோர் இருந்தனர்.

Related Stories: