×

ரூ.300 கோடியில் ‘நமக்கு நாமே’, ரூ.100 கோடியில் ‘நகர்ப்புற வேலைவாய்ப்பு’ 2 புதிய திட்டங்கள் தொடக்கம்: சேலம் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சேலம்: சேலத்தில் நடந்த விழாவில், ரூ.300 கோடியில் ‘நமக்கு நாமே திட்டம்’, ரூ.100 கோடியில் ‘நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்’ ஆகிய 2 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டம், ரூ.100 கோடியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்கள் துவக்கவிழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும், முடிவுற்ற பணிகளின் துவக்கவிழா சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. விழாவில்  ரூ.54 கோடி மதிப்பில் 60 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.385.52 கோடி மதிப்பில் 83 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 30,807 பயனாளிகளுக்கு ரூ.164.64 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திராவிட இயக்க வரலாற்றில் மிகப்பெரிய பங்கை சேலம் பெற்றிருக்கிறது. பேரறிஞர் அண்ணாவால் ‘‘அண்ணாதுரை தீர்மானம்’’ என்ற பெயரில் நீதிக்கட்சி, திராவிடர் கழகமாக உருப்பெற்றது சேலத்தின் தான். இதையும் தாண்டி தமிழினத்தலைவர் கலைஞர் வாழ்ந்த ஊர் சேலம். 1948முதல் 1950வரை இங்குள்ள கோட்டை அபீப் தெருவில்தான் அவர் வாழ்ந்தார். அந்த அடிப்படையில் என்னுடைய வீட்டுக்கு நான் வந்திருக்கிறேன்.

சேலம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை தீட்டிக்கொடுத்தது திமுக ஆட்சி தான் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன். இன்னும் அதிகமான சாதனை திட்டங்களை செயல்படுத்த தயாராகி வருகிறோம். அதற்கு எடுத்துக்காட்டுதான் இன்றைய நிகழ்ச்சி. நாம் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் பத்திரிகைகளிடம் ஒரு கருத்தை உறுதியாக கூறினேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமன்றி, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் இந்த ஆட்சி என்றேன். அந்த அடிப்படையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை  பெற்று 100 நாட்களுக்குள் தீர்வு காணும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு வரப்பெற்ற 50சதவீத கோரிக்கைகளை பரிசீலித்து அதற்கு தீர்வு கண்டுள்ளோம்.

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது கலைஞரின் தாரக மந்திரம். அதன்படி ஆட்சி நடக்கிறது. அந்தவகையில் சேலம் மாவட்டத்திற்கு 1,242 கோடியில் திட்டங்களை அறிவிக்கிறேன். ஒரு மாவட்டம் மேம்பட்டால் மாநிலம் மேம்படும். இதற்கு அந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனும் மேம்படவேண்டும். இதற்காகவே படிப்படியாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எனக்கு அந்ததுறை, இந்தத்துறை, அந்த மாவட்டம், இந்த மாவட்டம் என்ற பாகுபாடு கிடையாது. சில மாதங்களுக்கு முன்பு வறுமை குறைவான மாவட்டங்களில் தமிழகம் 4வது இடத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் கொண்டு வந்த சமூகநீதி திட்டங்களே இதற்கு காரணம். ஆனாலும் எனக்கு இதில் முழுமையான திருப்தி இல்லை. வறுமை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. அந்த இலக்கை நோக்கி, இந்த அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. அதற்காக நான் நாள், நேரம் பார்க்காமல் உழைக்கிறேன். உழைப்பு என்றால் அதற்கு பெயர் ஸ்டாலின் என்றார் கலைஞர்.

முதலில் கொரோனாவுடன் போராடி மீண்டோம். பிறகு வெள்ளத்தின் பிடியில் சிக்கி விடுபட்டோம். எப்படிப்பட்ட சோதனைகளையும் தாங்கிக் கொள்ளும் மனஉறுதியை மக்களான நீங்கள், எனக்கு தந்திருக்கிறீர்கள். 3 நாட்களுக்கு முன்பு சென்னையிலும், அடுத்து கோவையிலும், இப்போது சேலத்திலும், நாளை சென்னையிலும் இருப்பேன். இங்கு திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததோடு நின்று விடமாட்டேன். அது முடிந்து பயன்பாட்டுக்கு வரும்வரை உங்களிடம் வந்து கொண்டே இருப்பேன். வெளிப்படையாகவே சொல்கிறேன். ஓய்வு என்ற சொல்லை எப்போதுமே நான் விரும்பமாட்டேன். உழைத்துக் கொண்டே இருப்பேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவுக்கு நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் கார்மேகம் வரவேற்றார். கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா திட்ட விளக்க உரையாற்றினார். அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முத்துசாமி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், எம்பிக்கள் பார்த்திபன், பொன்.கவுதமசிகாமணி, சின்ராஜ், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

* தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய இசைப்பள்ளி ஆசிரியர்கள்
தமிழகத்தில் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக, பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாட வைக்க வேண்டும் என அரசு சார்பில் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சேலத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன் மற்றும் இசைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பாடினர்.

* நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் என்னென்ன பணிகள்
நகர்ப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாநில அளவில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நகர்ப்புறங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதாகும். இயற்கை வள மேலாண்மைப் பணிகள், வெள்ளத் தடுப்புப் பணிகள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், நகர்ப்புற இடத்தை பசுமைப்படுத்துதல் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், சமூக மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் வாழ்வாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்துதல், திறனுக்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொதுச் சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், பசுமை மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு இயற்கை வள மேலாண்மை தொடர்பான பணிகளை மேற்கொள்வது ஆகும்.   

* மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டம்
மக்களின் சுய உதவி, சுயசார்பு எண்ணம் ஆகியவற்றை வலிமைப்படுத்தவும், பரவலாக்கவும், மக்கள் பங்கேற்புடன் கூடிய நமக்கு நாமே திட்டத்தினை அப்போதைய முதல்வர் கலைஞர் 1997-98ம் ஆண்டு அறிவித்தார். மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி பொதுச் சொத்துக்களை உருவாக்கி பராமரித்து வருவதே நமக்கு நாமே திட்டத்தின் நோக்கமாகும். மேலும், இத்திட்டம் வளர்ச்சி பணிகளுக்கான திட்டமிடுதல் தொடங்கி, வள ஆதாரங்களை திரட்டுதல், பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் மேற்பார்வை செய்தல் என அனைத்திலும் மக்களை நேரடியாக ஈடுபடுத்துகிறது. மாநில அளவில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் மதிப்பீட்டில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பு நிதி மற்றும் அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

* சேலத்தில் ஜவுளி பூங்கா உட்பட ரூ.1,242 கோடிக்கு புதிய திட்டங்கள்
சேலம் மாநகராட்சியில் ரூ.530 கோடி செலவில், 520 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள், ரூ.158 கோடி செலவில் கூடுதல் குடிநீர் வழங்கும் பணி, சேலத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி மற்றும் அல்லிக்குட்டை ஏரி போன்ற நீர்நிலைகள் ரூ.69 கோடியில் மேம்படுத்தல்,சேலம், அம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.120 கோடியில் ரயில்வே மேம்பாலம், ரூ.20 கோடியில் ‘‘மாவட்ட பல்நோக்கு விளையாட்டு அரங்கம்’’, மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலைகள் ரூ.20 கோடி செலவில் மேம்படுத்தல், தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய பெரும் ‘‘ஜவுளிப் பூங்கா’’ சேலத்தில் விரைவில் அமைப்பு, 100 கொலுசு உற்பத்தியாளர்களுக்கு, உடனடியாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பன்மாடி உற்பத்தி மையம் ரூ.25 கோடியில் அமைப்பு, இளைஞர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ரூ.1,242கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


Tags : M.D. KKA Stalin , Rs 300 crore 'Namaku Name', Rs 100 crore 'Urban Employment' 2 new projects launched: Chief Minister MK Stalin's announcement at the Salem ceremony
× RELATED மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 7.56...