×

பிற மாநில காங். எம்எல்ஏக்களை கொண்டு உ.பி தேர்தலில் பிரியங்கா புது வியூகம்..!

லக்னோ: பிற மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களை கொண்டு உத்தரபிரதேசத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள பிரியங்கா காந்தி புது வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 350 தொகுதிகளை கைப்பற்ற ஆளும் பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக உத்தரபிரதேசத்தில் நடைபெறும் தேர்தல் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

அதனால், அம்மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மாநில தேர்தல் பொறுப்பாளரான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளார். இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநில காங்கிரஸ் தலைவர்களை அழைத்து ரகசிய ஆலோசனை நடத்தினார். உத்தரபிரதேச தேர்தலை புதிய வியூகங்களுடன் எதிர்கொள்ள பிரியங்கா காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், ‘உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் மற்ற மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களை களம் இறக்க பிரியங்கா முடிவு செய்துள்ளார். அவர்களுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்து பொறுப்பாளர்களாக நியமிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறார். வருகிற 15ம் தேதி லக்னோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரியங்கா பங்கேற்கிறார். அப்போது, மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு உத்தரபிரதேச மாநில சட்டசபை தொகுதிகள் பிரித்து கொடுக்கப்பட உள்ளன.

அவர்கள் அதனடிப்படையில் தேர்தல் பணியாற்ற உள்ளனர். இதன் மூலம் அதிக இடங்களை கைப்பற்ற முடியும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்’ என்று அவர்கள் கூறினர்.


Tags : Kong ,. U. ,MLA ,Priyanka , Other State Cong. Priyanka's new strategy in UP elections with MLAs ..!
× RELATED காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸை...