உட்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு; மஹூவா... உங்களுக்கு ஒன்றை சொல்கிறேன்: திரிணாமுல் எம்பியை எச்சரித்த மம்தா

கொல்கத்தா: உட்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவகாரம் தொடர்பாக எம்பி மஹூவாவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடிந்து கொண்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணா நகர் எம்பியான மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியை திணறடிக்கும் வகையில் கேள்விகளை எழுப்பி ஆக்ரோஷமாக பேசுவார். இந்நிலையில், மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மஹுவா மொய்த்ராவை, அவர் கடுமையாக சாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

அந்த வீடியோவில் மஹுவா மொய்த்ராவிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘மஹுவா... உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். யாருக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்பதை நான் பார்க்கத் தேவையில்லை. யாரையாவது விரும்பவில்லை என்றால், அவர்களை பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையான அரசியல் சில நாட்கள் பரபரப்பாக பேசப்படலாம். ஆனால் நீடிக்காது. ஒரே நபர் ஒரே பதவியில் அதிக நாட்கள் இருப்பதும் சரியானதாக இருக்காது.

உள்ளாட்சி தேர்தல் நடக்கும் நிலையில், யார் போட்டியிடுவார்கள், யார் போட்டியிட மாட்டார்கள் என்பதை கட்சி முடிவு செய்யும். கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது. கட்சிக்காக எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’ என்று கடிந்து கொண்டார். அப்போது மஹுவா மொய்த்ரா, மம்தாவின் ஒவ்வொரு வார்த்தையையும் அமைதியாக கேட்டுக் கொண்டே தலையசைத்தார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகிறது. இதுகுறித்து அவரிடம் கருத்து கேட்ட போது, ‘கட்சிக்குள் நடக்கும் விஷயங்களை வெளியே சொல்வது சரியாக இருக்காது’ என்றார்.

Related Stories: