ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் உத்திரமேரூர் கல்வெட்டை சுட்டிக்காட்டிய பிரதமர்

புதுடெல்லி: அமெரிக்கா நடத்திய ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில், உத்திரமேரூர் கல்வெட்டை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசியுள்ளார். அமெரிக்காவில் நடந்த ஜனநாயகத்திற்கான காணொலி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக நான் பெருமிதம் கொள்கிறேன். லிச்சாவி, சாக்யா போன்ற நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி அரசுகள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மலர்ந்துள்ளன. இதே ஜனநாயக உணர்வை 10ம் நூற்றாண்டின் ‘உத்திரமேரூர்’ கல்வெட்டில் காணமுடியும்.

ஜனநாயக உணர்வும், நெறிமுறைகளும் பண்டைக்கால இந்தியாவை மிகவும் வளமான நாடுகளில் ஒன்றாக மாற்றியிருந்தது. பல நூற்றாண்டுகால காலனி ஆட்சியால் இந்திய மக்களின் ஜனநாயக உணர்வுகளை நசுக்க முடியவில்லை. இந்தியாவின் சுதந்திரத்தின் மூலம் அதன் முழுமையான வெளிப்பாட்டை மீண்டும் காண முடிந்தது. கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக தேசக்கட்டமைப்பில் ஒப்பில்லாத நிலைக்கு அது வழிவகுத்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் முன்னெப்போதும் இல்லாத சமூக- பொருளாதார உள்ளடக்கமாக அந்த செய்தி இருக்கிறது.

இந்தச் சூழலில் இன்றைய உச்சிமாநாடு ஜனநாயகங்களுக்கிடையே கூடுதல் ஒத்துழைப்புக்கு உரியகால நிகழ்வாக அமைந்துள்ளது.  சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவது, நவீன டிஜிட்டல் தீர்வுகள் மூலம் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும்  வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்துவது ஆகியவற்றில் இந்தியா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் மூலம் நமது குடிமக்களின் பெருவிருப்பங்களை ஜனநாயகங்கள் நிறைவேற்ற முடியும். மனிதகுலத்தின் ஜனநாயக உணர்வைக் கொண்டாட முடியும். இந்த மதிப்புமிகு முயற்சியில் சக ஜனநாயகங்களுடன் இணைந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.

Related Stories: