வடகிழக்கு பருவமழையால் பலன்; நெல்லை, தென்காசியில் 11 அணைகளும் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 11 அணைகள் உள்ளன. இதில் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகளும், தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணை ஆகிய 5 அணைகளும் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இரண்டு தடுப்பணைகள் உள்ளன. நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, தென்காசி மாவட்டம் கடனாநதி ஆகியவற்றில் திறக்கப்படும் உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் கலந்து தாமிரபரணியின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணை வழியாக சென்று புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

இதே போல தென்காசி மாவட்டம் கருப்பாநதி, அடவிநயினார் அணை போன்ற அணைகளின் உபரிநீர் சிற்றாற்றில் கலந்து நெல்லை அருகே சீவலப்பேரியில் தாமிரபரணி ஆற்றில் இணைந்து கடலுக்கு செல்கிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் அணைகள் நிரம்பினால் தூத்துக்குடி மாவட்டம் மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைகள் உடனே மறுகால் பாய்ந்து விடும். நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு அணைகள் மட்டும் போதிய நீர்வரத்து இல்லாததால் கடந்த நவம்பர் மாதம் இறுதி வரை நிரம்பவில்லை. இந்நிலையில் வடக்கு பச்சையாறு அணை கடந்த 5ம் தேதியும், மணிமுத்தாறு அணை கடந்த 8ம் தேதியும் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

தற்போது வடக்கு பச்சையாறு அணை, மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இதன் மூலம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 11 அணைகளும் நிரம்பியுள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தில் கை மேல் பலன் கிட்டியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணை கடந்த 50 நாட்களுக்கு மேலாக மறுகால் பாய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு பருவமழையின் பலனாக அனைத்து அணைகளும் நிரம்பி விட்டதால், இந்த ஆண்டு பிசான பருவ நெல் சாகுபடிக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

4 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

தாமிரபரணி ஆற்றின் மூலம் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு குடிநீர் கிடைக்கிறது. தற்போது அணைகள் முழுவதுமாக நிம்பி காணப்படுகிறது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பிசான பருவ நெல் சாகுபடிக்கு மார்ச் 31ம் தேதி வரை பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். எனினும் அடுத்த ஏப்ரல், மே மாதங்களான கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: