திருவாரூர் அருகே வேளாண் உதவி இயக்குனர் ஆபீசில் ரெய்டு: ரூ.23 லட்சம் பறிமுதல்

திருவாரூர்: வலங்கைமான் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 18 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து சோதனை நடத்தினர். இதில் ரூ.23 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மூலம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு ஒன்றிய, மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த விதை கிராமத் திட்டத்தின் கீழ், 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விதை உளுந்து வழங்குவதற்காக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இந்நிலையில் மானிய விலையில் விவசாயிகளுக்கு விதை உளுந்தினை வழங்காமல் வேளாண்மை துறையினர் தனியார் நிறுவனங்களுக்கு விவசாயிகளின் பெயரில் போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்து வருவதாக திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வி, சித்ரா உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழுவினர் 3 வாகனங்களில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு வந்து திடீர் சோதனை நடத்தினர். அப்போது வேளாண் உதவி இயக்குனர் பாலசுப்ரமணியன் மற்றும் 10 பெண் ஊழியர்கள் உள்பட 25க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தில் இருந்தனர்.  லஞ்ச ஒழிப்பு துறையினர் அலுவலக கதவுகள், ஜன்னல் கதவுகளை பூட்டிக்கொண்டு விசாரணையை துவக்கினர். அலுவலகத்தில் இருந்த 25பேரையும் வெளியே விடாமல் செல்போன்களையும் வாங்கிக்கொண்டு தொடர்ந்து சோதனை நடத்தினர். மாலை 3 மணிக்கு துவங்கிய சோதனை விடிய விடிய இன்று காலை வரை 18 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இதில், விவசாயிகள் பெயரில் போலி ஆவணம் தயார் செய்து, தனியார் நிறுவனங்களுக்கு விதை உளுந்து விற்றது அம்பலமானது. ரூ.23 லட்சத்து 42 ஆயிரத்து 150 வரை முறைகேடு நடந்துள்ளது சோதனையில் தெரியவந்தது.

இந்த சோதனையில் ரூ.23 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் போலி ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை  கைப்பற்றினர். இதுதொடர்பாக வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் வேளாண் அலுவலர், உதவி அலுவலர்கள் வலங்கைமான், அரித்துவாரமங்கலம், ஆவூர், ஆலங்குடி உள்ளிட்ட டெப்போ மேலாளர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: