×

திருவாரூரில் சமுதாய வளை காப்பு விழா 100 கர்ப்பிணி பெண்களுக்கு 11 வகையான சீர்வரிசை பொருட்கள்-கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர்

திருவாரூர் : திருவாரூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், எம்எல்எ பூண்டி கலைவாணன் வழங்கினர்.திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது.இதில் 100 கர்ப்பிணிதாய்மார்களுக்கு 11வகையான சீர்வரிசைப் பொருட்களை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏ பூண்டிகலைவாணன் ஆகியோர் வழங்கினர். பின்னர் கலெக்டர் கூறியதாவது, ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது.

இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், காப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமானதாக இருக்கும் என்பதற்காக வளைகாப்பு ஏற்படுத்த அறிவியல் பூர்வமான நிகழ்ச்சி தான் இந்த சமுதாய வளைகாப்பு. வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் இருந்து வரும் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட கூடாது என்ற தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்பட்டுவரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து காப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக கருதப்படுவது பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்ப கால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணித் தாய்மார்களை சென்றடைய செய்து அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், ஆரோக்கியமான, அறிவான குழந்தைகள் பிறப்பதை உறுதி செய்தல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப்படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள் மற்றும் குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதை உறுதி செய்தல் போன்ற பல்வேறு தகவல்கள் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எடுத்துக் கூறப்படுகிறது என்றார்.

நிகழ்ச்சியில் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் புலிவலம் தேவா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கார்த்திகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாஸ்கரன் மற்றும் ஒன்றியக்குழு கவுன்சிலர் முருகேசன், குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜெனிபர்கிரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Community Archive ,Thiruvarur , Thiruvarur: Collector Gayatri Krishnan has made arrangements for pregnant women under the Integrated Child Development Program in Thiruvarur.
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...