ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்

மும்பை: ஒமிக்ரான் தொற்று பாதிப்பு பரவுவதை தடுக்கும் நோக்கில் மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 17 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறையுடன் தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஏற்கனவே, மத்திய அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து தமிழக துறைமுகங்களுக்கு வரும் பயணிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்களில் யாருக்காவது தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களைத் தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

தமிழக எல்லைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, ஒமிக்ரான் பாதிப்பு உள்ள மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோரை மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். மேலும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முககவசம், சமூக இடைவெளி போன்ற நோய்த் தடுப்பு விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா பாதிப்பு அதிகரித்தால் நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து 3-வது அலை அச்சுறுத்தல் எழுந்தபோதே அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. தற்போது அதுபோன்ற சூழல் எழும்பட்சத்தில் அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: