×

விழுப்புரம் அருகே பரபரப்பு சம்பவம்: ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி: நடத்துனர், ஓட்டுனர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற அரசுப் பேருந்து நடத்துனர், ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.  விழுப்புரத்திலிருந்து, கொத்தமங்கலம் கிராமத்துக்கு வழித்தட எண் 27 அரசு நகரப்பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அரசுப்பேருந்து புறப்பட்டுச் சென்றது. இதனை, விழுப்புரம் அருகே இருவேல்பட்டை சேர்ந்த அன்புச்செல்வன்(45) என்பவர் ஓட்டிச் சென்றார். நடத்துனராக குடுமியான்குப்பத்தைச் சேர்ந்த சிலம்பரசன்(32) என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில், ேகானூர் கிராமத்துக்கு முன்னதாக பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பெரும்பாலான பயணிகள் தங்களது ஊரில் இறங்கி விட்டனர். கோனூரைச் சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவி மட்டும் பேருந்தில் தனியாக பயணித்தார். சென்னையில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வரும் அம்மாணவி, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளாராம்.

இந்நிலையில் கடைசி சீட்டில் மாணவி தனியாக பயணிப்பதை பார்த்த நடத்துனர் சிலம்பரசன், அவரிடம் பேச்சு கொடுத்து சிலமிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோனூர் பேருந்துநிறுத்தம் வந்ததும் மாணவி எழுந்து பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், டிரைவர் கோனூர் பேருந்துநிறுத்தம் இன்னும் வரவில்லை என்று கூறி வேகமாக ஓட்டிச்சென்றுள்ளார்.  பின்னர், கொத்தமங்கலம் ரயில்வே சுரங்கப்பாதையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, நடத்துனர் சிலம்பரசன், மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஓடும் பேருந்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. உடனே, அலறி கூச்சலிட்ட மாணவி, தனது உறவினர்களுக்கு போன் செய்துள்ளார். சிறிதுநேரத்தில் அங்கு திரண்டுவந்த உறவினர்கள் பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் பேருந்தில் நடந்த சம்பவங்களை மாணவி கூறி கதறி அழுதுள்ளார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் நடத்துனர் சிலம்பரசனுக்கு தர்மஅடி கொடுத்து அவரையும், டிரைவரையும் காணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம், டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர் புகார்அளித்தார்.  அதில், தனியாக பயணித்தபோது நடத்துனர் சிலம்பரசன் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு டிரைவரும் உடந்தையாக இருந்தார். நான் சத்தம்போட்டு பேருந்தை நிறுத்தச்சொன்னபோது நிற்காமலும், சிலம்பரசனை தடுத்துநிறுத்தாமல் உடந்தையாக இருந்ததாக புகாரில் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து நடத்துனர் சிலம்பரசன், ஓட்டுனர் அன்புச்செல்வன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

2 பேரும் சஸ்பெண்ட்
விழுப்புரம் அருகே கொத்தமங்கலம் சென்ற அரசுப்பேருந்தில் இரவில் தனியாக பயணித்த கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் ஊடகம் மற்றும் சமூகவலைதளங்களிலும் பரவின.  இந்நிலையில், பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட ஓட்டுனர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் மோகன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 2 பேரையும் உடனடியாக கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். அதேபோல், அவர்களை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்து, விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் செல்வன் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Villupuram , Villupuram, college student, attempted rape, arrested
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...