பனி மூட்டத்தில் ஹெலிகாப்டர் மறைந்து சிதறும் சத்தம் கேட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை: குன்னூர் விபத்தை கடைசி நிமிடத்தில் வீடியோ எடுத்தவர் பேட்டி

கோவை: ‘‘பனிமூட்டத்தில் ஹெலிகாப்டர் மறைந்து சிதறும் சத்தம் கேட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை’’ என ஹெலிகாப்டரை கடைசி நிமிடத்தில் வீடியோ எடுத்தவர் தெரிவித்துள்ளார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் கடந்த 8ம் தேதி மதியம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்தனர். விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் ஹெலிகாப்டர் பனி மூட்டத்தில் மறைவது போன்று சுற்றுலா பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பனி மூட்டத்தில் மறைவதும், சில வினாடிகளில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறும் சத்தம் கேட்க, சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைவது போன்று இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவுகிறது.  இந்த வீடியோவை எடுத்த சுற்றுலா பயணிகள் யார்? இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்பது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த வீடியோவை எடுத்த கோவை ராமநாதபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஜோபால் மற்றும் அவரது நண்பர் நாசர் ஆகியோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்தனர்.

ஜோபால் கூறுகையில், ‘‘‘‘நான் போட்டோகிராபராக வேலை செய்து வருகிறேன். என்னுடைய நண்பர் நாசர் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகளுடன் குடும்பத்தினர் 6 பேர் காட்டேரி வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றோம். அப்பகுதி நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் கூறியதால் அந்த இடத்திற்கு சென்றோம். டிசம்பர் 8ம் தேதி 12.14 மணிக்கு அந்த வீடியோவை நான் எடுத்தேன். அப்போது அங்கு மிகுந்த பனி மூட்டமாக காணப்பட்டது. அப்போது திடீரென ஹெலிகாப்டர் வந்ததால் எனது மொபைல் போனை எடுத்து எதேச்சையாக வீடியோ எடுத்தேன். ஏனென்றால் அப்பகுதியில் சினிமாவில்தான் ஹெலிகாப்டரை பார்த்துள்ளோம். நேரில் பார்ப்பதால் வியப்பில் வீடியோ எடுத்தேன். பின்பு சிறிது நேரத்தில் ஹெலிகாப்டரின் இறக்கை மரத்தில் மோதி விழுந்தது போல் டமார் என சத்தம் கேட்டது. என்னுடைய நண்பர் நாசர் விழுந்து விட்டதா? என கேட்டார். அதற்கு நான் ஆமாம் என்றேன்.

மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டோம். பின்பு அங்கிருந்து நாங்கள் காரில் கிளம்பும்போது 10 நிமிடத்தில் அங்கு ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் வந்தது. அவர்கள் மீட்பு பணியை துரிதப்படுத்தினர். அவர்களிடம் கேட்டதற்கு இங்கு நிற்கவேண்டாம். புறப்படுங்கள் எனக் கூறினர். தொடர்ந்து நானும், என்னுடைய நண்பர் குடும்பத்தினரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றோம். பின்பு இரவு தான் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டோம்.

இந்த சம்பவம் எங்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அடுத்த நாள் காலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றோம். அங்கிருந்து காவல் நிலையத்திற்கு போக சொன்னார்கள். தற்போது கோவை கமிஷனர் அலுவலகத்தில் தகவல் கொடுத்து விளக்கம் அளிப்பதற்காக வந்துள்ளோம். ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தது நாட்டிற்கு பெரிய இழப்பு. அந்த அதிர்ச்சியிலிருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. நாங்கள் சாதாரணமாக சுற்றுலா சென்றவர்கள் தான்’’’’ என்றார். இதனைத்தொடர்ந்து அவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வீடியோ எடுத்தது தொடர்பாக விளக்கம் அளித்தனர். மேலும் இது தொடர்பாக முழு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  மலைவாழ் மக்களுக்கு  டிஜிபி பாராட்டு: ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது    மீட்பு மற்றும்  தீயணைப்புக்கு உதவிய அப்பகுதி மலைவாழ் மக்களுக்கு தமிழக காவல்துறை   டிஜிபி சைலேந்திரபாபு நேற்று கம்பளி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர், அவர்  கூறியதாவது: ஹெலிகாப்டர்  விபத்து குறித்து  காவல்துறைக்கு முதல் தகவல் அளித்தது நஞ்சப்பசத்திரத்தை சேர்ந்த  ஜெயசீலன் ஆவார். அவரை, காவல்துறை சார்பில் பாராட்டியுள்ளோம்.  மேலும், மீட்பு பணிக்கு உதவிய மக்களுக்கு, கம்பளி, பெட்சீட், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை காவல்துறை வாயிலாக வழங்கிய மக்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளோம்.  இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.

ஏர்மார்ஷல் மன்வேந்தர் சிங்  2-ம் நாளாக நேரில் ஆய்வு

ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த, விசாரணை அதிகாரியாக ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர், நேற்று முன்தினம் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். விபத்து நடந்த இடத்தின் அருகே கிராமவாசிகள் குடியிருப்பு உள்ளது. போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பாக அவர்கள்தான் நேரில் சென்று உதவியுள்ளனர். அவர்களிடம், மன்வேந்தர் சிங் விசாரணை நடத்தினார். பின்னர், காவல்துறையினர், தீயணைப்பு படையினரிடமும் விசாரணை நடத்தினார். நேற்று 2-வது நாளாக விபத்து நடந்த  இடத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். ராணுவத்தில் பயன்படுத்தப்படும் 2   ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டு, அதன்மூலம் வனத்தின் மேற்பரப்பு படம்பிடிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆய்வு நடந்தது. இதுதவிர, முப்படை  அதிகாரிகளும் சம்பவ இடத்தில் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த,  நீலகிரி மாவட்டத்தில் நேற்று முழு கடையடைப்பு நடந்தது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளையும் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைத்து ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ஊட்டியில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினரும் இரங்கல் தெரிவித்து ஆட்டோக்களை இயக்கவில்லை.  காந்தல் பகுதியில் பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் இலை பறிப்பதை தவிர்த்து தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்தனர்.

Related Stories: