கோவா காங். தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா: பிரியங்கா காந்தி அப்செட்

பனாஜி: கோவாவில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரசாரத்தை தொடங்கிய நிலையில், போர்வோரிம் தொகுதி காங்கிரஸ் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.  கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகின்றது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 17 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. ஆனாலும் 13 இடங்களை பெற்ற பாஜ, சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. வரும் தேர்தலில் காங்கிரஸ் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. கோவாவில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.

முன்னதாக போர்வோரிம் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் காங்கிரஸ் கட்சி தீவிர ஆர்வம் காட்டவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதேபோல் தெற்கு கோவாவை சேர்ந்த கட்சியின் மூத்த தலைவர் மொரீனோ ரிபெல்லோவும் ராஜினாமா செய்துள்ளது கட்சியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது தொடர்பாக அவர் மாநில காங்கிரஸ் கட்சிக்கு எழுதிய கடிதத்தில், ‘கர்டோரிம் தொகுதியில் தற்போது இருக்கும் எம்எல்ஏ அலெக்சோ ரிஜினால்டோ லோரென்கோ கடந்த நான்கரை ஆண்டுகளாக கட்சியின் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அவருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் நான் அதிருப்தி அடைந்தேன். இதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: