×

திமுக எம்பி தயாநிதிமாறன் கண்டனம்: மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதம் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி: 2026ல் கட்டி முடிக்கப்படும் என அரசு பதில்

புதுடெல்லி: ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதமானது, தமிழக மாணவர்களுக்கு  இழைக்கப்படும் அநீதி’ என திமுக எம்பி தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவனை கட்டப்படுவது தொடர்பாக மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்ட கேள்வியில் கூறியிருப்பதாவது:

* பிரதம மந்திரி ஆரோக்கிய பாதுகாப்பு திட்டத்தின் மூலம் திட்டப் பணிகள் 5 மற்றும் 6ம் கட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனைகளின் (எய்ம்ஸ்) விவரங்கள், அப்பணிகளின் தற்போதைய நிலை மற்றும் அப்பணிகள் எப்போது நிறைவு பெறும் என்ற விவரங்களை பட்டியலிட்டு தெரியப்படுத்தவும், குறிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் கூறவும்.
* அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அதற்காக இதுவரை செலவு செய்த தொகை எவ்வளவு? திட்டம் மற்றும் ஆண்டு வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்த வேண்டும்.
* அத்தோடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடுத்த கட்ட பணிகளான , நிர்வாகத்தின் கீழ் அமையும், ஆட்சேர்க்கை , சம்பளம் மற்றும் கல்வி உதவித் தொகைக்கென ஒதுக்கப்பட்டு, செலவிடப்பட்டுள்ள அல்லது செலவிடப்படுவதற்கான தொகை எவ்வளவு?
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தின் பணிகள் நிறைவடையும் வரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்வி பயில்வதற்காக வேறு மாற்று இடங்கள் ஏதேனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனவா? அவ்வாறெனில் அந்த இடம் எங்கு, எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரியப்படுத்த வேண்டும்.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவு பெறுவதில் ஏன் இவ்வளவு காலதாமதம்? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, 2026ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும் என்றும், அதுவரை மாற்றாக அரசு கல்லூரி அல்லது தனியார் பல்கலைகழகங்களில் மாணவர்களின் சேர்க்கைக்கு பரிந்துரைக்கலாம் என பதிலளித்துள்ளார். இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள எம்பி தயாநிதி மாறன், ‘மதுரை எய்ம்ஸ் அறிவிப்பு தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரதமரே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்து அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போது ஒன்றிய அமைச்சர் 2026ம் ஆண்டில் தான் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும் என்றும், மாணவர்களுக்காக தற்காலிகமாக மாற்றுக் கல்லூரியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறார்.

பெற்றோர்களும் மாணவர்களும் எய்ம்சை தேர்ந்தெடுப்பதற்கு காரணமே மற்ற கல்லூரிகளை விட அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கும் என்றும், குறிப்பாக டெல்லி எய்ம்சுக்கு நிகராக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான். இப்படி இருக்கையில் அவர்களின் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் மாற்று பல்கலைக்கழகங்களை பரிந்துரைப்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா? தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி, பல மருத்துவ கல்லூரிகளுக்கு சொந்தமான கட்டடங்கள் இல்லாத காரணத்தால் உரிமம் ரத்து செய்யப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே , அப்படி இருக்கையில் மதுரை உள்ளிட்ட சில எய்ம்ஸ் கல்லூரிகளுக்கு மட்டும் மாற்று பல்கலைக்கழகங்களை எப்படி ஒன்றிய அரசு பரிந்துரைக்க முடியும்’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags : DMK ,Dayanidhimaran ,Madurai AIIMS , DMK, MP Dayanidhimaran, condemned
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...