×

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவு: அதிமுக விஐபிக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் கலக்கம்

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலையில், அரசியல் அழுத்தம் இருப்பதாக உறவினர்கள் எழுப்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து மாநகர காவல் துறையில் இருந்து சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதனால் அதிமுக விஐபிக்கள், முன்னாள் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏ.வி.வெங்கடாசலம். கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வனத்துறையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றார். வெங்கடாசலம் பணியில் இருக்கும் போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சந்தன மரத்தால் ஆன கட்டில் செய்து கொடுத்துள்ளார். அதைதொடர்ந்து ஜெயலலிதாவிடம் நேரடியாக பேசக் கூடிய வகையில் வெங்கடாசலம் இருந்தார். இதனால் அதிமுக விஐபிக்கள் வெங்கடாசலத்துடன் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.

அதற்கு பரிசாக வெங்கடாசலம் ஓய்வு பெற்ற நிலையில், அவரை கடந்த 2019ம் ஆண்டு மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவராக அதிமுக அரசு நியமித்தது. 2 ஆண்டுகள் பதவி காலத்தில் வெங்கடாசலம் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 23ம் தேதி மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவராக பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில், வெங்கடாசலத்திற்கு சொந்தமான வேளச்சேரியில் உள்ள வீடு, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மாப்பாளையத்தில் உள்ள வீடு, கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகம் என 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத ₹13.50 லட்சம் ரொக்க பணம், 11 கிலோ தங்கம், 15.25 கிலோ சந்தன மரம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் சோதனையில் கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் சொத்துகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் கோட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே கடந்த மாதம் இறுதியில் வெங்கடாசலம் தனது குடும்பத்துடன் சொந்த மாவட்டமான சேலத்திற்கு சென்று வந்தார். அப்போது அதிமுக முக்கிய விஐபிக்கள் வெங்கடாசலத்தை நேரில் அழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சேர்ந்துதான் சில முறைகேடுகளில் வெங்கடாசலம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு அவர் பயந்து இருந்ததாக தெரிகிறது. இதனால் சேலத்தில் இருந்து சென்னை வந்த வெங்கடாசலம் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.அதேநேரம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய வேலூர் பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்விப்பிரிவில் பணியாற்றிய செயற்பொறியாளர் ஷோபனா அலுவலகம் மற்றும் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் ₹2.06 கோடி ரொக்க பணம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எப்போதும் இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பொதுப்பணித்துறை பெண் அதிகாரியான ஷோபனாவை அதிரடியாக கைது செய்தனர்.

இது வெங்கடாசலத்திற்கு மேலும் நெருக்கடியை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2ம் தேதி மதியம் உணவு கூட சாப்பிடாமல் வெங்கடாசலம் தனது வீட்டின் முதல் மாடியில் வெகு நேரம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாலை அவரது மனைவி வசந்தி டீ குடிக்க கணவரை அழைக்க வந்த போது அறையின் கதவை வெங்கடாசலம் திறக்கவில்லை. சந்தேகமடைந்த அவர் சம்பவம் குறித்து வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி விரைந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து பார்த்த போது வேட்டியால் மின்விசிறியில் தூக்கிட்டு வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வெங்கடாசலம் செல்போனை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் வெங்கடாசலம் தற்கொலைக்கு முன்பு அவரது செல்ேபானில் இருந்த அனைத்து தகவல்களையும் அழித்துவிட்டாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து போலீசார் வெங்கடாசலம் பயன்படுத்திய செல்போனை தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெங்கடாசலம் தைரியமான நபர், எந்த சூழ்நிலைகளிலும் தனது நிதானத்தை இழக்காதவர் என்றும், இவரது தற்கொலை முடிவுக்கு அரசியல் அழுத்தம்தான் காரணம் இருக்கும் என்றும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

போலீஸ் விசாரணையில் வெங்கடாசலம் தற்கொலை பின்னணியில் அரசியல் அழுத்தம் இருந்ததற்கான சில ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக வெங்கடாசலம் குடும்பத்தாரும் ஆட்சேபணை தெரிவித்ததால் இந்த வழக்கு மாநகர காவல் துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி நேற்று முன்தினம் இரவு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதைதொடர்ந்து வேளச்சேரி காவல் நிலையத்தில் வெங்கடாசலம் தற்கொலைக்கான விசாரணை அறிக்கையை ேபாலீசார், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையை தொடர்ந்து ஓரிரு நாளில் வெங்கடாசலம் தற்கொலை வழக்கை சிபிசிஐடி கையில் எடுத்து தனது விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அவருடன் நெருக்கமாக இருந்து வந்த அதிமுக விஐபிக்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் கலக்கமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சிபிசிஐடியின் முழுமையான விசாரணைக்கு பிறகே வெங்கடாசலம் தற்கொலைக்கு என்ன காரணம் என்று முழுமையாக தெரியவரும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.போலீஸ் விசாரணையில் வெங்கடாசலம் தற்கொலை பின்னணியில் அரசியல் அழுத்தம் இருந்ததற்கான சில ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது

Tags : Govt ,CBCID ,Pollution Control Board ,AIADMK ,IAS , Former chairman of the Pollution Control Board commits suicide Government orders CPCIT probe: AIADMK VIPs, IAS officers riot
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...